மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாடு என்ற வார்த்தை உட்பட, தமிழ்நாட்டின் கோரிக்கை எதுவும் இடம்பெறாததால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என முதல்வர் ஸ்டாலின் திங்களன்று அறிவித்தார். இவரோடு, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மாநில முதல்வர்களும் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர். இந்த நிலையில், டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியிருக்கும் சூழலில் பாஜக மத்திய அரசை விமர்சித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “இந்நேரம் டெல்லியில் நடைபெறும், பிரதமர் தலைமையிலான “நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நான் ஒன்றிய பா.ஜ.க அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால், நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள். அதற்கு அடையாளம்தான், கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்.