இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர்கள், “பெரிய பெரிய ஜாம்பவான்கள் மாவட்டச் செயலாளராக இருந்த மதுரையில், வட்டச்செயலாளராகத் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கி, மாநகராட்சி கவுன்சிலராகி, 2011-ல் எம்.எல்.ஏ-வான செல்லூர் ராஜூ அப்படியே அமைச்சராகவும் உயர்ந்தார். அதோடு மாநகரச் செயலாளர் பதவியும் கிடைக்க, தனக்குப் போட்டியாக யாரையும் வரவிடாமல் பார்த்துக்கொண்ட செல்லூர் ராஜூ, கட்சியில் சீனியர்களான ராஜன் செல்லப்பா, சாலைமுத்து, ஏ.கே.போஸ், ராஜாங்கம், எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டவர்கள் முக்கியத்துவம் பெறாத வகையில் பார்த்துக்கொண்டார். 2016-க்குப் பிறகு மதுரை மாவட்ட அரசியலுக்குள் நுழைந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் மல்லுக்கட்டினார். 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கோஷ்டி அரசியலை ஓரங்கட்டி அமைதியானார்.
இந்த நிலையில்தான் அமைச்சர் பி.டி.ஆருடன் ஏற்பட்ட பிரச்னைக்குப் பிறகு பாஜக-விலிருந்து விலகிய டாக்டர் சரவணன் அ.தி.மு.க-வில் சேர முயன்றபோது, தனக்குப் போட்டியாக வருவார் என நினைத்த செல்லூர் ராஜூ கட்சியில் சேர்க்க ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், ஆர்.பி.உதயகுமார் மூலம் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கட்சியில் இணைந்தார் டாக்டர் சரவணன். அதேநேரம் செல்லூர் ராஜூவின் ஆதரவு இல்லாமல் மாநகரக் கழகத்தில் செயல்பட முடியாது என்பதால், ஒருவழியாக செல்லூராரைச் சந்தித்து மரியாதை செய்தார் டாக்டர் சரவணன். நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் போட்டியிட யாரும் முன்வராதபோது டாக்டர் சரவணன் துணிச்சலாக முன்வந்தது எடப்பாடி பழனிசாமிக்குப் பிடித்துப்போனது.
இந்த நிலையில்தான், `தேர்தலில் செல்லூர் ராஜூ முழுமையாக வேலை செய்யவில்லை, தேர்தலில் டாக்டர் சரவணன் நிறைய செலவு செய்திருக்கிறார். கட்சியைச் சுறுசுறுப்பாக்க, அவரை மாவட்டச் செயலாளாராக்குங்கள். தென்மாவட்ட அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்களில் அகமுடையாருக்குப் பிரதிநிதித்துவம் இல்லை’ என்று அ.தி.மு.க-வில் ஒரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றனர்.
என்னதான் இருந்தாலும் செல்லூர் ராஜூ சீனியர், மக்கள் அனைவருக்கும் அறிமுகமானவர், அதனால் யாருக்கும் பிரச்னை இல்லாமல் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கலாமா என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுவருவதாகவும், அப்படி அமைத்தால் டாக்டர் சரவணனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், அதை மற்ற மாவட்டச் செயலாளர்கள் ஏற்றிக்கொள்வார்களா?” என்கிறார்கள்.