`மருத்துவ, ஆயுள் காப்பீடு… GST வேண்டாமே!’ – அமைச்சரவையில் இருந்தே வந்த கோரிக்கை; செவி சாய்க்குமா?

பா.ஜ.க அரசு ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தியதற்குப் பிறகு, இந்தியாவில் சிறு குறு தொழில்கள் நசிந்துவிட்டன என்று எதிர்க்கட்சிகள் புலம்புகிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டின் திருப்பூர், கோயம்புத்தூர், சிவகாசி உள்ளிட்ட தொழில் நகரங்களில் ஜி.எஸ்.டி-யால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டன என்று சிறு குறு தொழில் முனைவோர் வேதனை தெரிவிக்கிறார்கள்.

நிர்மலா சீதாராமன்

பெரிய தொழிலதிபர்களும், சிறு குறு தொழில் முனைவோரும், எதிர்க்கட்சியினரும்தான் ஜி.எஸ்.டி-யை விமர்சித்துவருகிறார்கள் என்று பார்த்தால், ‘ஜி.எஸ்.டி-யை நீக்குங்கள் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய அமைச்சர் ஒருவர் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘ஆயுள், மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள் மீதான ஜி.எஸ்.டி-யை நீக்குங்கள்’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு பிரீமியங்கள் என இரண்டுக்கும் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்படுவது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைக்கு வரி விதிப்பதற்கு ஒப்பாகும்.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை எனும் அபாயத்தை உணர்ந்த ஒரு நபர், இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு தனது குடும்பத்துக்கு சில பாதுகாப்பை வழங்குவதற்காக எடுக்கும் காப்பீடுக்கான பிரீமியத்துக்கு வரி விதிக்கப்படக்கூடாது என்று ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் கருதுகிறது. அதேபோல், மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தின் மீதான 18 சதவிகித ஜி.எஸ்.டி., சமூகத்துக்கு அவசியமான இந்த பிரிவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது’ என்று நிதின் கட்கரி குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ‘உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு சிரமமாக இருப்பதால், ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜி.எஸ்.டி-யைத் திரும்பப் பெறுவதற்கான எனது ஆலோசனையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலியுங்கள்’ என்று நிதின் கட்கரி தனது கடிதத்தல் தெரிவித்திருக்கிறார்.

ஜி.எஸ்.டி

நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்திருக்கின்றன. நிதின் கட்கரியின் கோரிக்கைக்கு தனது எக்ஸ் பக்கத்தில் ஆதரவு தெரிவித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம், பட்ஜெட் விவாதத்தின்போது மருத்துவக் காப்பீடு திட்ட பிரீமியத்துக்கான ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டுமென்று தான் பேசிய வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்.

சமாஜ்வாடி கட்சி எம்.பி-யான ராஜீவ் குமார் ராய், ‘மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது எங்களின் நீண்டகாலக் கோரிக்கை. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்.

முந்தைய மோடி ஆட்சியில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருந்த நிலையில், அது குறித்து விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. சமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால், மக்கள் பாதிக்கப்படுவார் என்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பேசினர். அப்போது, ‘நான் அந்தளவுக்கு அதிகமாக பூண்டு வெங்காயம் சாப்பிட மாட்டேன். வெங்காயம் சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான்’ என்று பதில் சொன்னார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கார்த்தி சிதம்பரம்

அந்த கருத்துக்காக நிர்மலா சீதாராமன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். தற்போது, ‘ஆயுள், மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள் மீதான ஜி.எஸ்.டி-யை நீக்குங்கள்’ என்று மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மூத்த அமைச்சர் ஒருவரே நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த கோரிக்கைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன பதில் சொல்லுவார்? பொறுத்திருந்து பார்ப்போம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *