மீண்டும் வெடிக்கப்போகும் விவசாயிகள் போராட்டம் – சமாளிக்குமா மோடி 3.O அரசு?!

வேளாண் விளைப்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதத்துக்கான சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் இறங்க விவசாயிகள் முடிவுசெய்திருக்கிறார்கள். மூன்றாவது முறையாக மோடி அரசு பதவியேற்றிருக்கும் நிலையில், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவது, ஆட்சியாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்

மத்திய பா.ஜ.க கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி 2020, 2021-ம் ஆண்டுகளில் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். டெல்லியின் எல்லையில் முகாமிட்டு பல மாதங்கள் தொடர்ந்த அந்தப் போராட்டத்தின்போது, 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ (எஸ்.எம்.கே) தலைமைலான அந்தப் போராட்டத்துக்கு மோடி அரசு அடிபணிந்தது.

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனாலும், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன், மின்சாரச் சட்டம், வேளாண் விளைப்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கைகளையும் விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால், அவற்றை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

ஹன்னன் முல்லா

இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக டெல்லியில் போராட்டம் நடத்த பஞ்சாப் விவசாயிகள் புறப்பட்டனர். ‘டெல்லி சலோ’ என்று புறப்பட்ட அந்த விவசாயிகள் மீது அரியானா மாநில பா.ஜ.க அரசின் போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். மேலும், விவசாயிகளை டெல்லிக்குச் செல்லவிடாமல் சாலைகளில் ஆணிகளைப் பதித்தும், தடுப்புகளை அமைத்தும் தடைகளை ஏற்படுத்தினர்.

தற்போது, மூன்றாவது முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில், மீண்டும் போராட்டத்தைத் தொடங்க விவசாயிகள் முடிவுசெய்திருக்கிறார்கள். ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’வின் பொதுக்குழு கூட்டம் ஜூலை 10-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.கே.எம் கூட்டமைப்பின் தலைவர்களான ஹன்னன் முல்லா, பி.கிருஷ்ண பிரசாத், யுத்வீர் சிங் ஆகியோர், போராட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்கள்.

Farmers Protest | விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டம்

அப்போது அவர்கள், “பா.ஜ.க-வின் வகுப்புவாதக் கொள்கை, பெருநிறுவன சார்புக் கொள்கை ஆகியவற்றை முறியடிக்க வேண்டுமென்று மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் விவசாயிகளும் தொழிலாளர்களும் பணியாற்றினார்கள். அதன் பலனாக, பா.ஜ.க 63 இடங்களை இழந்தது. வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றபெற்றது’ என்றனர்.

அனைத்து வேளாண் பயிர்களுக்கும் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமாக உத்தரவாதம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் வேளாண் கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும். மின்சாரத் துறையில் தனியார் தலையீடு தடுக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது எங்களின் முக்கியமான கோரிக்கைகள். இது தொடர்பாக, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் வேளாண் துறை செயலாளருக்கும் எஸ்.கே.எம் நிர்வாகிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன் பிறகுதான், விவசாயிகள் போராட்டம் அப்போது முடிவுக்கு வந்தது.

விவசாயிகள் போராட்டம்

2021-ம் ஆண்டு மத்திய அரசின் 15 கோரிக்கைகளை விவசாயிகள் சங்கங்கள் முன்வைத்தன. அதில், வேளாண் விளைப்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண் கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கவிருக்கிறார்கள். முதற்கட்டமாக, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை – மாநிலங்களவை எம்.பி-க்கள் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவதென்று அவர்கள் முடிவுசெய்திருக்கிறார்கள்.

‘பெரு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டுமென்று வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி பெருநிறுவனங்கள் வெளியேறும் நாளாக அனுசரிக்கப்படும். அன்றைய தினம் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று எஸ்.கே.எம் அறிவித்திருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் 400 இடங்களைப் பிடிப்போம் என்று பிரதமர் மோடி கூறிய நிலையில், 240 இடங்களைத்தான் பா.ஜ.க பிடித்தது. அதனால், பிற கட்சிகளின் ஆதரவுடன்தான் தற்போது மத்தியில் ஆட்சியமைத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில், அடுத்த 2-3 மாதங்களில் மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க இருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்

அப்படியான சூழலில், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் போராட்டத்தில் இறங்குவதென்று விவசாயிகள் முடிவுசெய்திருக்கிறார்கள். தற்போதைய சூழலில், விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதைவிட, சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் போராட்டம் நடத்தினால், அது தங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள் பா.ஜ.க தலைவர்கள். மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் மோடி தலைமையிலான இந்த அரசாங்கம் விவசாயிகளின் போராட்டத்தை சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *