தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ”நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என, அ.தி.மு.க ஆட்சியில் இறுதி வரை போரடினோம். நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக நீட் தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டினை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.
இதனால், அரசு பள்ளி மாணவர்கள், ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் நிலை உருவாகி உள்ளது. ஆனால், ஒரே கையெழுத்தில் நீட் தேர்வினை ரத்து செய்து விடுவதாக கூறிய தி.மு.க, 3 ஆண்டுகளாகியும் அதனை செய்யமால் ஏமாற்றி வருகிறது. ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒன்று கூடி எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்ந்தெடுத்தோம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் துயரப்பட்டு இருந்த எங்களுடன், அவருடைய நிழலாக இருந்த சசிகலா எங்களுக்கு ஆதரவாக இருந்ததார்.