பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதற்கான வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, அதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் திமுகவின் மூத்த அமைச்சர்கள் பலர் பங்கேற்று இருந்தனர்.
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, ஒரு வகுப்பறையில் டீச்சருக்கு புதிய மாணவர்களை பற்றி பிரச்சனை இல்லை; பழைய மாணவர்கள் தான் சிரமமானவர்கள். அந்த வகையில் இங்கு நிறைய சீனியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பெயில் ஆகிப் போனவர்கள் அல்ல; ரேங்க் வாங்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள்.
அவர்களில் துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர். கலைஞர் ஒரு விஷயத்தை சொன்னால், அதற்கு அப்படியா! சந்தோஷம் என்று துரை முருகன் பதில் அளிப்பார். அவர் நன்றாக இருக்கிறது சந்தோஷம் என்று பதில் அளிக்கிறாரா? அல்லது நன்றாக இல்லை என்பதற்காக சந்தோஷம் என்று பதில் அளிக்கிறாரா என்பதை புரிந்து கொள்ள முடியாது என்றார்.
#JUSTIN மூத்த அமைச்சர்கள் தொடர்பாக ரஜினியின் பேச்சுக்கு, அமைச்சர் துரைமுருகன் பதில்#DuraiMurugan #Rajinikanth #News18TamilNadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/1JegMv6ibx
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 25, 2024
ரஜினிகாந்தின் பேச்சை கேட்டு மேடையில் இருந்த முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் சிரித்து ரசித்தனர். ரஜினியை தொடர்ந்து மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் என்னை விட வயதில் மூத்தவர். எனக்கு அறிவுரை கூறிய ரஜினிகாந்த் நீங்கள் சொன்னதை நான் புரிந்துகொண்டேன், பயப்பட வேண்டாம், என்றும் நான் தவறிவிட மாட்டேன் ; நீங்கள் மனம் திறந்து பாரட்டியதற்கு நன்றி என்றார்.
நடிகர் ரஜினிகாந்தின் இந்த பேச்சு சோசியல் மீடியாவில் அதிகமாக வைரலானாது. திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகனை பழைய ஸ்டூடண்ட் என்று ரஜினிகாந்த் விமர்சனம் செய்துள்ளார் என சமூக வலைதளங்களில் அதிகளவில் கருத்துகள் பகிரப்பட்டது. இதனிடையே அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த் மேடையில் பேசியது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த துரைமுருகன், மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி, பல்லு விழுந்து, தாடி வளர்த்து நடிக்கிறதுனாலதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாம இருக்கா என பதில் அளித்துள்ளார்.
.