வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவின் அண்ணன் மருமகன் ஆவார்.
இவர் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது ராசிபுரம் காவல் நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 76.50 லட்சம் ரூபாய் பண மோசடி புகார் செய்தார்.
அந்தப் புகாரில், ‘‘சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 15 பேர் தன்னிடம் 76.50 லட்சம் பணம் அளித்ததாகவும், அந்த தொகையை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கியதாக தெரிவித்திருந்தார். எனினும், அவர் வேலை எதுவும் வாங்கித் தரவில்லை புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார் தொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ள சரோஜா , இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்..
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை வந்தது. அப்போது காவல்துறை சார்பில்,
ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிரான புகாரில் போதுமான ஆதாரங்கள் சாட்சிகள் உள்ளதாக தெரிவித்தார். 34 சாட்சிகள் உள்ளதாகவும், ஆவணங்கள் உள்ளதாகவும் அவரது வீட்டுக்கே சென்று பணம் கொடுத்ததற்கான சாட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் வழக்கை ரத்து செய்யக்கூடாது என தெரிவித்தார்.
இதையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக சரோஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
.