`மோடியின் ஆட்சி அதிகார ஆயுளை நீட்டிக்க வெளியிடப்பட்ட பட்ஜெட்' – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகர், தெற்கு, வடக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

கூட்டத்தில் செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி, கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர்  செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மத்திய நிதி நிலை அறிக்கை தேசத்திற்கான நிதிநிலை அறிக்கையா? ஆந்திரா, பீகாரருக்குமான நிதிநிலை அறிக்கையா என்பதை நிதி அமைச்சர் சொல்ல வேண்டும். நிதிநிலை அறிக்கை என்பது ஒன்றிய அரசு போடுகின்ற நிதிநிலை அறிக்கை.

ஆனால், இந்த நிதிநிலை அறிக்கை  ஆந்திர பிரதேசத்திற்கும், பீகாருக்கும் எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் என்பது தெரியவில்லை. ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாயை ஆந்திராவுக்கும் பீகாருக்கும் பாஜக அரசு வாரி வழங்கி உள்ளது.  இதைத்தான் சந்தர்ப்பவாதம், பாசிசம் என்கின்றோம். மோடி தன் ஆட்சி அதிகாரத்தை  காப்பாற்றிக் கொள்வதற்காக  வெளியிடப்பட்டதுதான் இந்த மத்திய பட்ஜெட். அனைத்து மாநிலங்களிலும் உள்ள நிதியை எடுத்து இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் கொடுப்பது என்ன நியாயம்?

செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை காப்பி அடித்துள்ளது பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நரேந்திர மோடி, தமிழ்நாட்டை ஏன் வஞ்சிக்கிறார்? ஓர வஞ்சனை காட்டுகிறார்? எந்த காலத்திலும் தமிழக மக்கள் பா.ஜ.கவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். பாசிச சக்திகளை தமிழ் மண் ஏற்று கொள்ளாது.” என்றார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *