யாருடைய நம்பிக்கைக்கும் திராவிட மாடல் ஆட்சியில் தடை இல்லை

தமிழ் கடவுள் முருகனைப் போற்றும் வகையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு விமரிசையாக நடைபெறும் நிலையில், ஆன்மீக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

அழகன் முருகனை தெய்வமாய், தந்தையாய், குழந்தையாய் கொண்டாடும் ஆன்மீக பற்றாளர்களுக்கு இது திருவிழாக் காலம். அதற்கு மகுடம் சேர்க்கும் விதமாக அறுபடைகளில் மூன்றாம் வீடாக போற்றப்படும் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக தொடங்கியது.

தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டையொட்டி காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் 100 அடி கம்பத்தில் மாநாட்டு இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை நாதஸ்வர தவில் இசையுடன் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைத்தார்.

காலை 9 மணிக்கு மாநாட்டு கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வேல்கோட்டத்தை, சச்சிதானந்தம் எம்.பி., செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது, இறை வணக்கப் பாடலை சீர்காழி சிவ.சிதம்பரம் பாடியபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க:
“மேலிட உத்தரவில்லாமல் ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்திருக்க மாட்டார்” – ரஜினிகாந்த் பேச்சு

பின்னர் வாழ்த்துறை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு வரலாறு மட்டுமின்றி ஆன்மீக வரலாற்றிலேயே அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும் என்று தெரிவித்தார். ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும் என்றும், கோயில் கருவறைகளில் சமத்துவம் நிலவ வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், யாருடைய நம்பிக்கைக்கும் திராவிட மாடல் ஆட்சியில் தடை இல்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முருகன் மாநாட்டில் கலந்து கொண்ட குட்டி கே.பி.சுந்தராம்பாள் என அழைக்கப்படும் தியா, தனக்கு ஏன் முருகனைப் பிடிக்கும் பாடல் மூலம் விளக்கம் தந்தார்.

இதையும் படிக்க:
ரஜினி அறிவுரையை புரிந்து கொண்டேன்.. எதிலும் தவறிட மாட்டேன்.. உஷாராக இருப்பேன் – முதல்வர் ஸ்டாலின்

நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனம், அமைச்சர் சேகர்பாபுவுக்கு தன் மீது இந்த அளவிற்கு அன்பு உள்ளது என்று தற்போது தான் தெரிந்ததாக தெரிவித்தார். மாநாட்டில் ஆன்மீகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *