அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர்மீது, கடந்த ஜூலை 14-ம் தேதி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு தொடர்பாக மேல கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதனடிப்படையில் செல்வராஜ், மாரப்பன், பிரவீன் உள்ளிட்ட 7 பேர்மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்நிலையில், காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், வாங்கல் காவல் நிலையத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரத சகோதரர், பிரவீன் உள்ளிட்டவர்கள் தலைமறைவானார்கள். இதற்கிடையில், சி.பி.சி.ஐ.டி-க்கு இந்த வழக்கு மாற்றப்பட, 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர் கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மூன்றுக்கும் மேற்பட்ட முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுப்படி செய்யப்பட்டது. இதனால், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு. இந்த நிலையில், சார்பதிவாளர் அளித்த புகார் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீஸார் 34 நாள்கள் தலைமறைவாக இருந்த, அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் உள்ளிட்ட இருவரையும், கேரளாவில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து கைதுசெய்து கரூர் குற்றவியல் நடுவர் நீதித்துறை எண் 1-ல் ஆஜர்படுத்தினர். நீதிபதி பரத்குமார் வரும் ஜூலை 31-ம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.