சமீபத்தில் வங்கதேசம் முழுவதும் கலவர பூமியாக மாறி உள்ளது. காரணம், அரசாங்க வேலைகளில் பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச போரில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு தருவதை இளைஞர்கள் எதிர்க்கின்றனர். தாத்தா சுதந்திர போராட்ட வீரர் என்றால், அவரின் கொள்ளு பேரனுக்கும் இந்த இட ஒதுக்கீடு தரப்படுகிறது.
வாழையடி வாழையாக அவர்களின் குடும்பமே அரசாங்க வேலைகளில் சேரும் சூழல் ஏற்படுகிறது. இந்த 30% இட ஒதுக்கீட்டுடன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என அரசாங்க வேலைகளில் மொத்தம் 52% இடங்கள் இட ஒதுக்கீட்டு முறையின் மூலம் நிரப்பப்படுகின்றன. இதனால் படித்த, தகுதியுடைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அற்ற சூழல் ஏற்படுகிறது. இதனால் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
வங்கதேசத்தில் இருக்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. இதனால் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் 30% இட ஒதுக்கீட்டை 5%-ஆக குறைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வங்கதேச இளைஞர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இட ஒதுக்கீடு தொடரும் என்றதால் வெடித்தது கலவரம். நாடு முழுவதும் போராட்டக்காரர்களால் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அரசாங்கத்தால் இணைய சேவையும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டன. இந்த கலவரத்தால் 150- க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர் என வங்கதேச அரசின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கதேசம் முழுவதும் இந்த கலவரத்தால் 9000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது வங்கதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 455 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஜி.டி.பி தரவரிசையில் வங்கதேசம் 35-வது இடத்தில் உள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் கலவரத்தால் அந்த நாட்டிற்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வர்த்தகம் மற்றும் தொழில் துறை நிறுவனம் (FICCI) தெரிவித்துள்ளது.
வங்கதேசம் ஆடைகள் ஏற்றுமதி தொழிலில் சிறந்து விளங்கி வருகிறது. இந்த கலவரத்தால் ஆடைகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை இழப்பை சந்தித்துள்ளன. கடந்த ஆண்டு வங்கதேசம் 43 பில்லியன் அமெரிக்க டாலர் வரை ஏற்றுமதி மூலம் வருமானத்தை ஈட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டால் வங்கதேச அரசிற்கு மேலும் பல பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றன.