கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில்தான் கடந்த 29-ம் தேதி வயநாட்டில் வெளுத்து வாங்கிய மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மேப்பாடி, சூரல் மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்தடுத்து வீடுகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 170-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 220-க்கும் மேற்பட்ட மக்களைக் காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து மீட்புப் பணிகளில் 200-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் விமானப்படை வான்வழியாக மீட்க முனைப்புக் காட்டி வருகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் பேசுகையில், “தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான மக்கள் விழித்துத்தான் இருந்தார்கள். இருப்பினும் அனைவரும் வீடுகளுக்குள் இருந்தார்கள். அதிகாலை 2 மணி அளவில் பலத்த சத்தம் கேட்டது. அப்போதுதான் வெளியில் வந்து பார்த்தோம். கண்ணுக்கு முன்னாள் வீடுகள் சரிந்து விழுவதைப் பார்க்க முடிந்தது. இதனால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியில் ஓடி வந்தார்கள். சிலரால் இடிபாடுகளிலிருந்து வெளியில் வர முடியவில்லை. இருப்பினும் மக்களை மீட்பதில் மீட்புக்குழு தீவிரம் காட்டி வருகிறது” என்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கேரளா முதல்வர் பினராயி விஜயன், “நிலச்சரிவில் காயமடைதோருக்கு உள்ளூர் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதையுண்டு போன மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதுவரை 3,069 பேர் மீட்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இதற்கிடையில் மத்திய வானிலை ஆய்வு மையம், ‘கேரளாவில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்புள்ளது. இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “தமிழக அரசு ரூ.5 கோடியும், சிக்கிம் அரசு ரூ.2 கோடியும் நிதி உதவி வழங்க உறுதியளித்திருக்கிறது” எனக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கடவுளின் தேசத்தில் இது ஒன்றும் முதல் முறை இல்லை. பல்வேறு தருணங்களில் மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. அப்போது 483 பேர் உயிரிழந்தனர். பிறகு 2019-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 121 பேர் உயிரிழந்தனர். அப்படி இருந்தும் கேரளா அரசு பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சூழலியல் ஆர்வலர்கள், “கேரளாவில் , குறிப்பாக வயநாட்டில் தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்கள் அதிகம் உள்ளன. இங்கு பணியாற்றியவர்கள்தான் நிலச்சரிவினால் அதிகம் பாதிப்பைச் சந்தித்திருக்கிறார்கள். அங்குச் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர் குழுக்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கின. ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவேதான் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.” என்கிறார்கள். இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகத் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தின் வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல் மலை ஆகிய பகுதிகளில் ஜூலை 29-ம் தேதி நள்ளிரவு மற்றும் 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இப்பகுதிகளில் மட்டும் கடந்த 4 நாட்களில் 70 சென்டிமீட்டர் வரை மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மனிதர்களே தங்கள் செயல்பாடுகளால் வரவழைத்துக்கொண்ட நிலச்சரிவுதான் இதுவும். வயநாடு மாவட்டத்தில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் இப்படி ஒரு விபத்து நடக்கும் என்பதை பல ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தனர். ஜூன் 2018ல் கோழிக்கோடு, கன்னூர், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அங்கு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் நிலச்சரிவு ஏற்பட பெருமழை ஒரு காரணம் என்றாலும், பல இடங்களில் அறிவியல்பூர்வமற்ற வகையில் மலைச்சரிவுகளில் ஏற்படுத்தப்பட்ட கட்டடங்களும் நிலச்சரிவுக்கு முக்கியக் காரணம் எனக் கண்டறிந்தது.
மேலும் ஒட்டுமொத்த வயநாடு மற்றும் குறிப்பாக தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட வைத்திரி தாலுகாவில் கடந்த 20 ஆண்டுகளில் நிலப்பயன்பாடு அதிகளவில் மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக இயற்கையாக அமைந்த மலைச்சரிவுகள் மற்றும் மலைமுகடுகளைத் தோண்டி, பிளந்து கட்டிடங்களை எழுப்பி அப்பகுதியின் நில அமைப்பியலே மாற்றப்பட்டுவிட்டது. பெரும் அளவில் மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக மணலை இறுகப்பிடிக்கும் வேர்கள் இல்லாததன் காரணமாக, ‘நிலச்சரிவை தாங்கும்’ திறனை மண் இழந்திருக்கிறது. இத்தன்மையை இழந்த நிலப்பரப்பில் அதிதீவிர மழைப்பொழிவு மணல் அரிப்பையும், இவ்வாறான மணல் சரிவையும் அடிக்கடி ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
வயநாட்டில் அதிக நிலச்சரிவைச் சந்தித்த இடமாக உள்ளது வைத்திரி தாலுகா. Hume Centre for Ecology and wildlife Biology மேற்கொண்ட ஆய்வின்படி வயநாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 90 விழுக்காடு நிலச்சரிவுகள் மலைச்சரிவு 30 டிகிரியாக இருந்த இடங்களில் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகிறது. மலைகளை வெட்டி, பிளந்து, தோண்டி அதன் இயற்கையான அமைப்பையே மாற்றியதால் அதிக அளவு மழையைத் தாக்குப் பிடிக்காமல் நிலச்சரிவு ஏற்படுகிறது. தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட அன்று 24 மணிநேரத்தில் வைத்திரி தாலுகாவில் மட்டும் 28 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வைத்திரி தாலுகா முழுவதும் மாதவ் காட்கிலின் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான WGEEP அறிக்கையில் சூழல் கூருணர்வு மிக்க மண்டலம் 1 (ESZ 1) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ESZ 1 என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் காடுகளை, காடு பாதுகாப்பு சாராத திட்டங்களுக்காகவும், வேளாண் நிலத்தை வேளாண்மை அல்லாத பிற தேவைக்காகவும் நிலப்பயன்பாடு மாற்றம் செய்ய முடியாது. ஆனால், இந்த அறிக்கையினையும் அதன் பின்னர் வந்த கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கையினையும் கேரள அரசு இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை.
தொடர்ச்சியாக நிலப்பயன்பாடு மாற்றம், வரைமுறையற்ற கட்டுமானங்கள், காடழிப்பு, காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் அதிகரிக்கும் மழைப்பொழிவு ஆகியவையே இப்பேரழிவுக்குக் காரணம். நிலம் வலுவிழப்பதைக் காடழிப்புடனும், நிலச்சரிவைப் பெருமழையுடனும், பெருமழையைக் காலநிலை மாற்றத்துடனும் தொடர்புபடுத்திப் பார்க்க நாம் தவறினால் இப்பேரழிவுகளைத் தடுக்க முடியாது. தமிழ்நாடு அரசு இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டி, கொடைக்கானல், கோத்தகிரி, குன்னூர், வால்பாறை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88