கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலா, முண்டக்கை, மேப்பாடி பகுதிகளில் கடந்த மாத இறுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமான குடும்பங்கள், தங்களின் உறவுகள், உடைமைகள், வீடு என அனைத்தையும் இழந்து நிர்கதியாகினர். அவர்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பிலிருந்தும், நேரடியாக நிவாரணப் பொருள்களும், முதல்வர் நிவாரண நிதி வங்கிக் கணக்குக்கு பணமும் வந்தது.
அதைத்தொடர்ந்து, சுமார் 617 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக 10,000 ரூபாயை வங்கிக் கணக்குகளில் அரசு நேரடியாகச் செலுத்தியது. மேலும், இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக 124 குடும்பங்களுக்கு மேலும் 10,000 ரூபாய் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், 12 குடும்பங்களுக்கு தலா 6 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சூரல்மலா பகுதியிலிருக்கும் கேரள கிராமின் வங்கியின் (Kerala Gramin Bank) கிளை, நிவாரணத் தொகை பெற்ற பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து, 1,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் மாதாந்திர தவணைத் தொகை (EMI) பிடித்தம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்த்த மாநில இளைஞர் காங்கிரஸ், டி.ஒய்.எஃப்.ஐ மற்றும் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் திரும்பச் செலுத்துமாறு கல்பெட்டா மண்டலக் கிளை முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், EMI பிடித்தம் செய்யப்படுவதை நிறுத்துமாறு கூறிய ஆர்ப்பாட்டகாரர்கள், எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்குமாறும், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்குமாறும் வலியுறுத்தினர். இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகியொருவர், “வங்கியின் செயல் மனிதாபிமானமற்றது. இந்தச் செயலுக்காக அதிகாரிகள் மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், செவ்வாய்க் கிழமை முதல் போராட்டத்தை மற்ற கிளைகளுக்கும் விரிவுபடுத்துவோம்” என்றார்.
மறுபக்கம், வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகஸ்ரீ டி.ஆர், பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு வங்கிக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில், வங்கியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் முதல்வர் பினராயி விஜயன், “பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் கடனை தள்ளுபடி செய்ய வங்கிகள் முன்வர வேண்டும். நெருக்கடியான நேரங்களில் வங்கிகள் இப்படி தன்னிச்சையான முடிவுகள் எடுக்கக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88