மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், வையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம்தான் V.மங்கம்மாள் பட்டி. இவ்வூரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 700 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவ்வூரில் ஆண்டிபட்டி – சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. சீமை கருவேலமரங்களின் வேர்கள் குடிநீர் செல்லும் பைப் லைன்களில் சேதத்தை ஏற்படுத்தியதை அடுத்து, புதிய பைப் லைன்கள் அமைக்கும் பணி 1 வருடத்திற்கு முன்னரே நிறைவடைந்து விட்டது.
இருப்பினும் தண்ணீர் இணைப்பைத் தமிழ்நாடு குடிநீர் வாரியம் வழங்கவில்லை. ஆழ்துளைக் கிணறு மூலம் வரும் நீரும் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை, மிகவும் உப்பாக உள்ளது. எனவே குடிநீருக்காக 2 கி.மீ அப்பால் உள்ள காரைக்கேனி, சத்திரப்பட்டி ஆகிய ஊர்களுக்கு மக்கள் செல்கின்றனர். இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இது பற்றி வையூர் ஊராட்சி மன்றத் தலைவர் க.பஞ்சவர்ணத்திடம் பேசினோம்.
அப்போது அவர், “நாங்கள் பலமுறை குடிநீர் வாரியத்திடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் பேசிப் பார்த்தோம்.
மீண்டும் மீண்டும் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை… எனவே தமிழ்நாடு குடிநீர் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுத்து, குடிநீர் இணைப்பை வழங்க வேண்டும். இதனால் மங்கம்மாள் பட்டியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும்” என்றார்.
“குடிநீர் என்பது அனைவருக்கும் அடிப்படைத் தேவையாகும். எனவே ஆண்டிபட்டி – சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து இவ்வூரில் செயல்படுத்த வேண்டும். குடிநீர் இணைப்பை வழங்க வேண்டும்” என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.