விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: `மைக்' சின்னத்திலேயே போட்டியிடுகிறதா நாதக?!

ஜூலை 10-ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரபரப்பாகியிருக்கிறது நா.த.க முகாம். நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அபிநயாவையே வேட்பாளராக அறிவித்தாலும், எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது. இது குறித்த விசாரணையில் இறங்கினோம்.

சின்னம் | சீமான் | Seeman

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்துடன் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. அச்சின்னம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நா.த.க-வுக்குக் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து மைக் சின்னத்தில் 40 தொகுதிகளில் போட்டியிட்டு 8.2% வாக்குகளைப் பெற்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடவே சீமான் விரும்புகிறார் எனத் தகவல்கள் கசிந்தன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “விவசாயம் தொடர்பான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் விருப்பம். அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக நா.த.க உருவெடுத்துவிட்டதால், சின்னத்தை மீட்டெடுப்பதிலும் சிக்கல்கள் இல்லை. ஆனால் நாள்கள் குறைவாக இருப்பதால் வருகின்ற இடைத்தேர்தலை மைக் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு, அதன் பின்னர் கரும்பு விவசாயி சின்னத்தையோ அல்லது விவசாயம் தொடர்பான வேறு சின்னத்தையோ தேர்வு செய்யதுகொள்ளலாம் என்ற குரல் கட்சிக்குள் வலுவடைந்திருக்கிறது” என்றனர்.

வேட்பாளர் அபிநயா

நம்மிடம் பேசிய நா.த.க நிர்வாகிகள் சிலர், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்மூலம் நா.த.க-வின் சின்னம் `மைக்’ என ஆழமாகப் பதிந்துவிட்டது. இந்நிலையில் மீண்டும் கரும்பு விவசாயி சின்னத்தை மீட்டெடுக்க முயற்சித்தால், தேர்தல் ஆணையம் என்றைக்கு சின்னத்தை ஒதுக்கும் என்ற சந்தேகம் இருக்கிறது. நாங்கள் சின்னம் பெற விண்ணப்பித்தால் வேண்டுமென்ற காலம்தாழ்த்திவிடும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே ’மைக்’ சின்னத்திலேயே போட்டியிடலாம் என நிர்வாகிகள் விரும்புகிறார்கள். அதுவே இறுதி முடிவாக இருக்கும்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *