வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவுக்கு அருகேயுள்ள திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரின் மனைவி விசாலாட்சி. இருவருமே `பார்வையற்ற’ மாற்றுத்திறனாளிகள். தம்பதியர் இருவரும் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் மேற்கொள்வதற்காக சமூக நலத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை எண்களைக் கொண்டு, போக்குவரத்துத் துறை சார்பாக `இலவச பயண அட்டை’ வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தங்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்துகொள்வதற்காக இருவரும் அடிக்கடி அரசுப் பேருந்துகளில் ஏறி வேலூர் வந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்தில் ஏறி பள்ளிகொண்டா நோக்கிப் பயணித்தனர். சென்னையில் இருந்து வேலூர் வழியாக திருப்பத்தூர் சென்ற `TN-23 N 2752’ பதிவெண் கொண்ட அரசுப் பேருந்தில் பயணம் செய்ததாகத் தெரிகிறது.
பேருந்தில் ஏறும்போதே, கண்டக்டர் முகம் சுளித்தபடி கடிந்துப் பேசியிருக்கிறார். சகித்துக்கொண்டு பேருந்தில் ஏறியவர்களை இருக்கையில் அமர வைக்கவும் கண்டக்டர் உதவி செய்யவில்லை. அப்போது, இருக்கையில் அமர்ந்திருந்த முகம் தெரியாத பயணிகள் இருவர் எழுந்து நின்று இவர்கள் அமர இடம் கொடுத்து உதவியிருக்கிறார்கள். பள்ளிகொண்டா நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, பார்வையற்ற தம்பதியரும் தட்டுத் தடுமாறி எழுந்து இறங்க முயன்றனர்.