அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அகரம் பாலத்தின் வழியாக குருவராஜபாளையம் ஊராட்சிப் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பாலப்பாடி, ஆர்ஜாதி உள்ளிட்ட கிராமங்களில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக தற்போது தற்காலிகப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இருப்பினும், இரண்டு முறை கனமழை காரணமாக அந்தப் பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்குச் சென்று வரத் தற்காலிகப் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. அதுவும் தற்போது திடீர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், இதற்கு நிரந்தர தீர்வான பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “குருவராஜபாளையம், பாலப்பாடி பாலம் கட்ட தொடங்கியதிலிருந்து கனமழை காரணமாக பணிகளை விரைந்து முடிக்க முடியவில்லை. அந்த ஆற்றிற்கு ஒரு கிலோமீட்டருக்கு முன்பு இரண்டு ஆறுகள் கூடுவதால், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் பாலம் கட்டும் பணி இரண்டு முறை தாமதமானது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மூன்று மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார். இந்த பாலத்தைக் கூடிய விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறினார்.
பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே இந்தப் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடித்தால், பயனுள்ளதாக இருக்கும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.