வீட்டுக்காவது உடலைக் கொண்டுச்செல்லலாம் என்று முடிவு செய்துவிட்ட மூதாட்டியின் குடும்பத்தினருக்கு `அமரர்’ ஊர்தியும் கிடைக்கவில்லை. ஆட்டோக்களும் சடலத்தை ஏற்றிச்செல்ல மறுத்துவிட்டதால், பொறுத்துப் பார்த்துவிட்டு கண்ணீர் கம்பலையுமாக பைக்கிலேயே மூதாட்டியின் உடலை கிடத்தி வீட்டுக்குக் கொண்டுச்சென்றிருக்கின்றனர்.
இது குறித்து விசாரித்தபோது, “தேசிய நெடுஞ்சாலையோரமே பள்ளிகொண்டா பேரூராட்சிப் பகுதி இருப்பதால், தொடர் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, காயமடைந்தோருக்கு அவசர சிகிச்சைத் தேவைப்படுகிறது. ஆனால், உயிர் காக்கும் வசதிகள் இல்லாததால், அடுக்கம்பாறைப் பகுதியிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்குத்தான் செல்ல நேரிடுகிறது. அதற்குள்ளாக உயிரிழப்புகளும் நேர்ந்துவிடுகின்றன.
பிரசவங்களையும் பார்க்காமல் அடுக்கம்பாறைக்குச் செல்ல செவிலியர்கள் சத்தம் போடுகின்றனர். இப்படித்தான் கடந்த ஏப்ரல் மாதம் பிரசவ வலி ஏற்பட்ட நிறை மாதக் கர்ப்பிணியை அடுக்கம்பாறைக்குச் செல்ல ஆம்புலன்ஸில் செவிலியர்கள் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டனர். செவிலியர் உடன் செல்லாததால், ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்துவிட்டது. அலட்சியம் காரணமாக, குழந்தையின் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், மூதாட்டியின் பிணத்தை பைக்கில் எடுத்துச்சென்ற துயரம் பேரதிர்ச்சியை உண்டாக்குகிறது.” என்றனர்.
`பள்ளிகொண்டா மருத்துவர் திருவலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இங்கு புதிய மருத்துவர் நியமிக்கப்படாததால், அவரே இரு இடங்களிலும் மாறி மாறி மருத்துவம் பார்க்கிறார்’ எனவும் வட்டார மருத்துவ அலுவலர் தரப்பில் அலட்சியமாக பதில் அளித்திருக்கின்றனர். இது, வேதனைக்குரியது. எனவே, பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவனைக்கு நிகராக தரம் உயர்த்தினால் மட்டும்தான் 24 மணிநேரத்துக்கும் உரிய சிகிச்சை கிடைக்கும். அரசு எங்களின் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும். அதுவரை இரண்டு மருத்துவர்கள் தலைமையில் பயிற்சிகள் மருத்துவர்களும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமர்த்தப்பட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர் பொது மக்கள்.
வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பானுமதியிடம், இது குறித்து விளக்கம் கேட்டபோது, “உயிரிழந்த மூதாட்டி, தொடர்ந்து பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு இருக்கிறது. அடிக்கடி மருத்துவரையும், செவிலியரையும் சந்தித்து மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வந்தார். இன்று காலை 9 மணிக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் அழைத்துவரப்பட்டிருந்தார். அந்த நேரத்தில், பெண் மருத்துவர் ஐஸ்வர்யா பணியில்தான் இருந்தார். ஈ.சி.ஜி உட்பட உடல் பரிசோதனை செய்யப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார். அங்கு இருந்த ஆம்புலன்ஸ் 8.30 மணிக்கு வேறொரு நோயாளியை அழைத்துவர சென்றுவிட்டது. இன்னொரு ஆம்புலன்ஸை அழைப்பதற்குள்ளாக மூதாட்டியின் உறவினர்களே இப்படிச் செய்துவிட்டார்கள். மூதாட்டியின் உறவினர்கள் செய்த தவறுதான் இது. நாங்கள் காத்திருக்கத்தான் சொன்னோம். இந்த விவகாரம் குறித்து நான் நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டு, மாவட்ட ஆட்சியரிடமும் விளக்கம் தந்துவிட்டேன். தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமாரும் அங்கு வந்திருந்தார். அவரிடமும் கலந்தாலோசித்து, இன்னொரு ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்யவிருக்கிறோம்’’ என்றார் விரிவாக.