தற்பொழுது கூட்டணி தயவால்தான் ஆட்சியை பிடித்துள்ளனர். அண்ணாமலை போன்ற அனுபவம் இல்லாதவர்கள் அரைவேக்காட்டுத்தனமாக அவதூறு பிரசாரம் செய்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி வைத்து 19.39 சதவிகித வாக்குகள் பெற்றோம். தற்போது நடந்த தேர்தலில் 20.46 சகவிகித வாக்குகள் பெற்று ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளோம்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை முன்னிலை படுத்திதான் வாக்குகள் கிடைத்தது, அண்ணாமலைக்காக ஒரு வாக்கு கூட யாரும் போடவில்லை. பாமக, பாரிவேந்தர், டிடிவி, சரத்குமார், ஓபிஎஸ், ஜான்பாண்டியன் ஆகியோருடன் கூட்டணி வைத்தும் வாக்கு குறைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியை கண்ணாடி பார்க்கச் சொல்கிறார் அண்ணாமலை… முதலில் அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்கட்டும். பாஜக-வில் தற்போது கிரிமினல் பின்புலம் உள்ளவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள், மூத்தவர்கள், அனுபவசாலிகளை திட்டமிட்டு அண்ணாமலை புறக்கணித்து வருகிறார்.
முதலீடு செய்யாமல் லாபம் எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். அதே போல், இன்றைக்கு அண்ணாமலை எந்த உழைப்பு இல்லாமல், தியாகம் செய்யாமல் முதலீட்டை அறுவடை செய்ய நினைக்கிறார், அவருக்கு எப்போதும் ஏமாற்றம்தான் கிடைக்கும்.
அதிமுக மீது அவருக்கு ஏன் அக்கறை? எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டு இயக்கத்தை தொடங்கியபோது கொடியில் அண்ணா படத்தை பொறித்தார். அண்ணாயிசத்தை உருவாக்கினார். ஆனால் அண்ணாவைப் பற்றி அண்ணாமலை தவறாக பேசினார், அதேபோல் எட்டு கோடி மக்களின் தெய்வமான ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசினார். தலைமை கழகம் சார்பில் கண்டனத்தை தெரிவித்தோம்
தொடர்ந்து ஜெயலலிதாவை அவதூறாகப் பேசினார். எடப்பாடி பழனிசாமியை பிரதமருக்கு வலதுபுறத்தில் அமர வைத்தோம் என்று அண்ணாமலை கூறுகிறார். ஆனால், அமர வைத்துவிட்டு அதிமுக-வின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் வகையில் அவதூறாக பேசினார்.
தமிழக நலனுக்காக எதையும் வலியுறுத்தியதில்லை அண்ணாமலை, அறிவுக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை எழுப்புகிறார். காய்ந்த மரத்தில்தான் கல்லடி படுவதுபோல் எடப்பாடி பழனிசாமி மீது பழிகளை சுமத்துகிறார்.
அண்ணாமலை சுற்றி சுற்றி சூழ்ச்சியை ஏற்படுத்துகிறார். அவர் விரிக்கும் சூழ்ச்சி வலையில் அதிமுக தொண்டர்கள் யாரும் சிக்க மாட்டார்கள். அதிமுக-வை தமிழக மக்கள் கைவிட மாட்டார்கள், எடப்பாடி பழனிசாமி காப்பாற்றி வருவதை சிலர் கபளீகரம் செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார் என்பதால் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியதை வாபஸ் வாங்க வேண்டும், இல்லையென்றால் அண்ணாமலைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்துவோம்.
அதிமுக பற்றி கவலைப்படும் நீங்கள், அதிமுக உறுப்பினரா? அதிமுக-வை தொண்டர்களும் மக்களும் பார்த்துக் கொள்வார்கள். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது போல உள்ளது, ஒருபோதும் உங்கள் சூழ்ச்சி எடுபடாது.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி மட்டும் முடிவு எடுக்கவில்லை. கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்களை அழைத்து கருத்துக் கேட்ட பின்புதான் முடிவெடுத்தார்.
ஈரோடு இடைத்தேர்தலைப் பற்றி அரசியல் நாகரிகம் இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார். இதே போன்று டெல்லி தலைமை அண்ணாமலையிடம் பேசியதை தனக்கு ஆபத்து வரும்போது கூட வெளியிடுவார். இதனால், டெல்லி தலைமைக்கு கூட அண்ணாமலையால் ஆபத்து இருக்கிறது. தொடர்ந்து எலும்பில்லாத நாக்குடன் அண்ணாமலை பேசினால் தொண்டர்களே வெகுண்டு எழுவார்கள். அரவேக்காட்டுத்தனமாக வார்த்தைகளை சிதற விடுவதால் அதிமுக-வுக்கு எந்த பின்னடைவும் ஏற்படப் போவதில்லை” என்றார்.