தற்போது அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், ‘தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சம்பவங்கள் மீனவர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையிலிருந்த கொண்டுவருவதற்கு மீட்புப்படகுகள், பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும், அடிப்படைத் தேவைகளை வழங்கிவிடவும் அனுமதி தர வேண்டுமென்று தமிழக மீனவர் சங்கங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
மேலும், பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்னையை தேர்தல் நேர முழக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் , தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும் என முதல்வர் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.