தமிழ்நாட்டின் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்துவரும் நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில், சட்டமன்றக் கூட்டதில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவரும் அ.தி.மு.க உறுப்பினர்களை நேற்று ஒருநாள் சபாநாயகர் அப்பாவு சஸ்பண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இன்று அ.தி.மு.க கொரடா எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமார் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து, ‘சட்டமன்றத்தின் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும்’ என அ.தி.மு.க சார்பில் கேள்வி நேரம் ஒத்திவைப்புத் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து அளித்திருக்கின்றனர். ஆனால், சட்டமன்றக் கூட்டம் தொடங்கியதும் வழக்கம் போல சட்டமன்றம் செயல்படத் தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்தும் கள்ளச்சாரய மரணம் குறித்து விவாதிக்காததால் இன்றும் அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க-வின் ஒத்திவைப்பு தீர்மானம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு,“சட்டமன்றம் கூடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கும் முன்பாக ஒத்திவைப்பு தீர்மானம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், அ.தி.மு.க கடைசி நேரத்தில்தான் தீர்மானத்தை வழங்கியது. அதனால் அதை ஏற்றுகொள்ள முடியாது” என விளக்கமளித்தார்.
ஆனாலும் அ.தி.மு.க உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அதனால் சபாநாயகர் அப்பாவு, அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரையும், இந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவுவரை சஸ்பண்ட் செய்வதாக அறிவித்து, அவர்களை வெளியேற்றும்படி சட்டமன்ற காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சட்டமன்றத்திலிருந்து வெளியேறி செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சிகள் உரிய விதியின் கீழ் விவாதிக்க அனுமதி கேட்டால் அனுமதி அளிப்போம் எனக் சபாநாயகர் குறிப்பிட்டார். அதனால்தான் நாங்கள் இன்று காலை சபாநாயகரை சந்தித்து ஒத்திவைப்பு தீர்மானத்தை வழங்கினோம்.
அப்படி இருந்தும் நாங்கள் இன்றும் வெளியேற்றப்பட்டிருக்கிறோம். இது வருத்தமளிக்கிறது. சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசுகிறார். அது அரசியல் பேசுவதற்கான இடமல்ல. சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என எங்கள் ஆட்சியில் எங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டபோது, 20.12.2022 அன்று அதற்கான அரசாணையை வெளியிட்டோம். மேலும், ஓய்வுபெற்ற நீதியரசர் குலசேகரன் தலைமையில், அவருக்கு தேவையான அதிகாரிகள், அலுவலகம் ஆகியவற்றை ஏற்பாடு செய்தோம்.
அதற்கான காலமும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் வந்தப்பிறகு, தி.மு.க அரசு அதற்கான காலக்கெடுவை நீடிக்காததால் அது காலாவதியாகிவிட்டது. இன்றைய சட்டமன்றத் தீர்மானத்தில் கூட மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றுதான் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மாநில அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும் அதை மாநில அரசு சார்பில் செய்யவில்லை. விக்கிரவாண்டி தேர்தலை மையப்படுத்திதான் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நாடகம் அரங்கேறுகிறது. மக்களின் துயரத்தில் பங்குகொள்ளவே நாங்கள் கருப்பு சட்டை அணிகிறோம். சட்டமன்றத்தில் மக்கள் மரணத்தை விட முக்கிய விவாதம் என்ன இருக்கிறது…
சம்பிரதாயத்துக்காகதான் இந்த சட்டமன்றக் கூட்டம் நடத்துகிறார்கள். ஆட்சியில் இருப்பதால் சர்வாதிகாரியாக நடந்துகொள்கிறார்கள். சட்டமன்றத்தில் அ.தி.மு.க உறுப்பினர்கள் பேசினாலே அஞ்சுகிறார்கள். நேற்று கேள்வி நேரத்தில் எங்களைப் பேசக்கூடாது எனக் கூறி எங்களை வெளியேற்றிவிட்டு, முதல்வர் 15 நிமிடங்கள் இது குறித்து விளக்கமளிக்கிறார் என்றால், இதில் என்ன மரபு இருக்கிறது. இது விதிமீறல் இல்லையா. எங்கள் கேள்விக்கு பதிலளிக்கவே மறுக்கிறார்கள். எங்கள் குரல்வளை, ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுகிறது. மக்களின் பிரச்னைகளை கண்டுக்கொள்ளாத அரசு நிலைத்ததாக வரலாறு இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88