ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளின்போது, “காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டு விஜய்யை உச்சி முகர்ந்தார்.
விஜய்யின் பதில் என்னவாக இருக்கும்?
ஒரு பக்கம் சீமான் எல்லா வகையிலும் விஜய்யுடனான கூட்டணிக்கான சிக்னல் கொடுத்துவரும் நிலையில் விஜய்யின் பதிலுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலின்போது சீமானின் நா.த.க மைக் சின்னத்தில் போட்டியிட, தேர்தலில் போட்டியிடாத விஜய்யின் ஆதரவு யாருக்காக இருக்கும் என்ற பேச்சு எழுந்தது. அப்போது வெளியான விஜய்யின் அடுத்த படமான `கோட்’ படத்தின் `விசில் போடு’ பாடல் போஸ்டரில் `மைக்’ இடம்பெற்றிருந்ததையும், `கேம்ப்பைனை திறக்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா?’ என்று பாடல் வரிகள் இடம்பெற்றிருந்ததைவும் குறிப்பிட்டு சீமானின் நாம் தமிழர் கட்சியினர் `விஜய்யின் ஆதரவு எங்களுக்குத்தான்!’ என கொக்கரித்தனர்.
தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் முடிவில், முதல்முறையாக 8% வாக்குகளைப் பெற்று அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்தார். குறிப்பாக, “நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!” என விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட அதற்கு சீமான், “உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி!” என கணிவுடன் நன்றி தெரிவித்தார்.
அதேபோல, கடந்த மாதம் விஜய் தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தபோது, பெரும்பாலான அரசியல் தலைவர்களின் பெயர்களுக்கு முன்பாக சாதாரணமாகவும் `மதிப்பிற்கு உரிய, அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய’ என்று முன்னொட்டைச் சேர்த்த விஜய், சீமானின் பெயருக்கு முன்பாக மட்டும் `நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய செந்தமிழன் சீமான்’ என்று தனித்துக்காட்டி நன்றி தெரிவித்திருந்தார்.
அந்த நிலையில், `சீமானுடன் கூட்டணி வைப்பீர்களா?’ என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம் பத்திரிகையாளர்கள் கேட்க, “எதுவாக இருந்தாலும் எங்கள் தலைவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியே அறிவிப்பார்!” என்று பதிலளித்தார். இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், “விரைவில் நடைபெறவிருக்கும் த.வெ.க மாநாட்டில் விஜய் ஒருவேளை சீமானுக்கு அழைப்பு விடுக்கும்பட்சத்திலோ, அல்லது தனது லெட்டர் பேடில் `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனத் தெரிவித்திருப்பதை அடியொற்றி தமிழ், தமிழர் நலன், தமிழ்த்தேசிய அரசியலை மையப்படுத்தி கொள்கை கோட்பாடுகளை அறிவித்தாலோதான் கூட்டணியை உறுதியாக எதிர்பார்க்க முடியும். அதுவும் 2026 தேர்தல் சமயத்தில்தான் விஜய் தனித்துப் போட்டியாக, மெகா கூட்டணியா, அப்படி கூட்டணி என்றால் யார் தலைமையில் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட், தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்படுமா? எனப் பல கட்டங்கள், பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. அதற்கான விடை விஜய்யின் முதல் மாநாட்டில் அவரின் முதல் அரசியல் உரையின்போதுதான் தெரியவரும்!” என்கின்றனர்.
சீமான் Waiting… விஜய்யின் பதில் Coming soon!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88