`அமெரிக்காவில் இருந்தாலும் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன்!' – மா.செ-க்களிடம் ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி உட்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், ஸ்டாலின் எழுதிய `40/40 தென் திசையின் தீர்ப்பு’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதோடு, மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதைத்தொடர்ந்து உரையாற்றிய ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர் கூட்டம் என்பதால், நாற்பதுக்கு நாற்பது வெற்றியை ஈட்டித் தந்த, மாவட்டச் செயலாளர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய வெற்றியை இதுவரை யாரும் பெற்றது இல்லை, நாமும் இதற்கு முன்பு பெற்றது இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகள் என்று நான் சும்மா ஏதோ மேடைப் பேச்சுக்காக குறிப்பிடவில்லை. மக்களைச் சென்று சேர்ந்திருக்கும் நலத்திட்டங்கள் எல்லாம் வாக்குகளாக மாற வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய களப்பணி மிக மிக அவசியம். அதற்கு இப்போதே நாம் உழைக்க வேண்டும்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ம் தேதி இரவு நான் அமெரிக்காவுக்குப் புறப்படவிருக்கிறேன். நான் அமெரிக்காவில் இருந்தாலும் தலைமைக் கழகம் மூலமாக இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன். நாளை மறுநாள் தலைவர் கலைஞர் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்படவிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, வரும் முப்பெரும் விழாவில் கழகத்தின் பவள விழா நிறைவையும் தீர்மானத்தில் சொன்னபடி மிகச்சிறப்பாக நடைபெற வேண்டும். கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சியைப் பிடித்த வரலாறு தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். அந்த வரலாற்றை எழுதியது நாம்தான். கட்சி தொடங்கி 75 ஆண்டுகள் ஆனபிறகும் ஆட்சியில் இருக்கும் இயக்கமும் நம்முடையதுதான்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

75 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த இயக்கத்தின் தேவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்கிறது. ஆலமரமாக இந்த இயக்கம் வேரூன்றி நிற்கிறது என்றால், அதற்கு காரணம், இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு, கோடிக்கணக்கானவர்களின் உழைப்பும், தியாகமும் உரமாக்கப்பட்டிருக்கிறது. அதன் பயனைத்தான் இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம். அதேமாதிரி, இந்த இயக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையும் நம்முடைய கைகளில் இருக்கிறது. அதற்கான உழைப்பை வழங்க உங்களை நீங்கள் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்” என்று உரையாற்றினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *