அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாகவும், மோசடி குறித்து விசாரிக்க வேண்டிய செபி அமைப்பின் தலைவரும் அதானி குழுமத்தில் பங்கு வங்கிருப்பதாகவும் ஹிண்டர்ன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தன. இதற்கிடையில், அதானி குழுமமும், செபி தலைவர் மாதபி பூரி புச்சும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (NLU) சட்ட மாணவர்களிடம் இன்று உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், “கடந்த வாரம் அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவர், சமூக ஊடகத்தில், நம் இந்திய பொருளாதாரத்தை அழிக்கும் வகையில் பேசிய செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தேன். அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் பொருளாதாரத்தை அழிக்க முயல்கிறார். உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து, நமது பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கம் கொண்ட இது போன்று கூறப்படும் கதைகளைக் கட்டுப்படுத்த ஓர் அதிகார வரம்பை நிறுவ வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.