திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், “மது மற்றும் போதைப் பொருள்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறோம். இந்தியா முழுவதும் மதுவிலக்கை ஒரு தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும். போதைப் பொருள்கள் வெகுவாக புழக்கத்தில் உள்ளன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். அரசமைப்புச் சட்டம் 47 அதற்கான வழிவகைகளை கூறுகிறது. எனவே, இதனை ஒரு மாநில அளவிலான பிரச்னையாக கருதாமல் தேசிய பிரச்னையாக கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் தேசிய மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிற மாநாடாக இந்த மாநாடு அமையும்.
கள்ளக்குறிச்சி அருகே இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். இந்த மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகள் மதுவை ஒழிப்பதற்கும், போதை பொருள்களை ஒழிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தொடர் பரப்புரையில் ஈடுபட இருக்கிறோம். இந்த மாநாட்டுக்கு அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரவு நல்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன்.
அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும். அவருடைய பயணத்தின் நோக்கம் தொழில் முதலீட்டு நிறுவனங்களை சந்தித்து வருவது. அந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாடு செல்லும் முதல்வர் நிர்வாகத்தை கவனிப்பதற்காக துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களை நியமிக்கலாம் என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அவர் 15 நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்த 15 நாட்களில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிற அளவுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் பெருகி உள்ள காலம் இது. எனவே, இது சம்பந்தமில்லாத ஒரு கோரிக்கையாக இருக்கிறது. தி.மு.க-வை சீண்டிப்பார்க்க இப்படி விமர்சிக்கிறார்கள்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்கிற ஒரு எண்ணம் நீண்ட காலமாக தமிழக அரசியலில் இருந்து வருகிற ஒன்றுதான். அந்த முயற்சியில் ஆந்திராவிலும் கூட என்.டி.ஆர்-யை பின்பற்றி பலர் வந்து பார்த்தார்கள். விஜய் கட்சி துவங்கியது குறித்து தமிழ்நாட்டிலே அப்படி பலர் முயற்சித்தும் அதில் வெற்றி பெற முடியவில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது. எம்ஜிஆர் சினிமாவில் இருந்த காலத்திலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால், அவர் அரசியலில் இருந்து அதாவது ஒரு ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரால் தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட போது நீண்ட நெடிய அனுபவம் உள்ள பல தலைவர்கள் அவரோடு வெளியேறினார்கள். அவருடைய வெற்றிக்கு அது ஒரு காரணம். வெறும் சினிமா ரசிகர்களை, ரசிகர் மன்ற தலைவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு வர அரசியல் செய்யவில்லை.
அவர் கட்சியை தொடங்குகிற போது தி.மு.க-விலிருந்து அவரோடு சேர்ந்து விலகிய பல அரசியல் தலைவர்கள் கட்சியை நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்கள் அவரோடு இருந்தார்கள். அதனால், வெற்றி பெற முடிந்தது. அதன் பிறகு, வந்து தலைவர்கள், அதாவது சினிமா மூலம் வந்த தலைவர்கள் அதில் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு அது ஒரு காரணம். தற்போது மக்களிடையே பிரபலமாக உள்ள சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம். விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். அவர் அரசியல் எவ்வளவு கடினமானது… போராட்டங்கள் நிறைந்த ஒரு களம் என்பதை இனி நடைமுறையில் அவர் சந்திக்க நிறைய வாய்ப்புகள் உருவாகும். அவற்றை தாக்குப் பிடித்து அவர் நிற்க வேண்டும். மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும். இது எல்லாம் நிகழ்ந்த பிறகு தான் இது குறித்து நாம் ஒரு கருத்தை சொல்ல முடியும். முன்கூட்டியே நாம் ஒரு யூகத்தில் கணக்கு போட்டு சொல்ல முடியாது. அரசியலில் விஜய் அவர்கள் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பிலே முருகன் மாநாட்டை நடத்திருக்கிறார்கள். இந்து சமய அறநிலைத்துறை மதம் சார்ந்த பணிகளை செய்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அப்படி பார்த்தால் இந்து சமய அறநிலைத்துறை வேண்டாம் என்று நாம் சொல்ல நேரிடும். இந்து சமய அறநிலையத்துறை ஒரு ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுத்த முடிவு அடிப்படையில் பழனியில் முருகன் மாநாட்டை நடத்தி இருப்பதாக தெரிய வருகிறது. இந்த மாநாடு பல லட்சக்கணக்கான மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்று இருப்பதாகவும் தெரிகிறது. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் கடவுள் / மதம் ஆகியவற்றை பயன்படுத்தி மக்களை அரசியல் அடிப்படை வாக்கு வங்கியாக மாற்றுவதற்கு வட இந்திய மாநிலங்களில் எவ்வாறு முயற்சித்தார்களோ, அதுபோல தமிழ்நாட்டிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அப்படிப்பட்ட, அந்த முயற்சிகளுக்கு இடம் அளிக்காமல் அவர்களின் அரசியல் சதியை அம்பலப்படுத்தக்கூடிய வகையிலே இந்து சமய அறநிலைத்துறை செயல்படுகிறது என்றால் அதை நாங்கள் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். மற்றபடி, அந்த மாநாடு சிறப்பாகவே நடந்தேறி இருக்கிறது. அதில், விமர்சிப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை. ஆனால், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் பக்தி இலக்கியங்கள் தொடர்பான போட்டிகள் நடத்தப்படும் என்று சொல்லி இருப்பது பரவலாக ஒரு விவாதத்தை எழுப்பி இருக்கிறது. அது மதம் சார்ந்த நடவடிக்கையாக அமைந்து விடாமல் அரசு கவனித்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன். ‘பா.ஜ.க-வுடன் தி.மு.க இணைகிறது’ என்று நீங்கள் கேட்கும் கேள்விகள், வெறும் யூகமான கேள்விகள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88