“பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை ஏலம் விட்டதில் முறைகேடு செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகள், நிலக்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடு…” என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வாடிப்பட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து மதுரை கலெக்டரிடம் புகார் அளிக்க வந்த மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பெருமாள்பாபுவிடம் பேசினோம், “வாடிப்பட்டி வட்டம் கட்டகுளம் கிராமத்தில் 110.1 ஏ, 361 ஆகிய சர்வே எண்களில் நூற்றுக்கணக்கான தென்னைமரங்களுடன் பொதுப்பணித் துறையின் நீர்வளத்துறைக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதை பராமரிக்க ஏலம் விடுவார்கள். அப்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் 183 தென்னைகளை ரூ 1,36,500 ரூபாய்க்கும், மற்றொரு 50 தென்னைகளை ரூ 6,090-க்கும் ஏலம் எடுத்தேன். ஆனால், ஏலம் எடுத்த நாள் முதல் என்னால் தோட்டத்துக்குள் நுழைய முடியவில்லை.
காரணம், ஏற்கனவே ஏலம் எடுத்திருந்தவர்கள் தாக்கல் செய்த வழக்கால், நான் உள்ளே செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். இரண்டு தோட்டங்களையும் மீட்டு ஒப்படைக்காமல், எதிர்த்து வழக்கு போட்டவர்களை தோட்டத்தை அனுபவித்துக்கொள்ள அப்போதிருந்த ஏ.இ-க்கள் செல்லையா, அவருக்குப்பின் மாயகிருஷ்ணனும், எஸ்.டி.ஓ கபீப்பாயும் அனுமதித்தார்கள். இதுகுறித்து ஆக்கிரமித்தவர்களிடம் கேட்டதற்கு “அதிகாரிகள் எங்களை அனுமதித்துள்ளார்கள்’ என்று என்னை மிரட்டினார்கள். பின்பு நான் வழக்கு தாக்கல் செய்ததில், ‘தோட்டத்தை ஒரு வருடம் அனுபவிக்க என்னை அனுமதிக்க வேண்டும், அல்லது மறு ஏலம் விடவேண்டும்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.