அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! – News18 தமிழ்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கனவான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

பவானி ஆற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்வதே அத்திக்கடவு – அவிநாசி திட்டமாகும். இந்த திட்டம் 65 ஆண்டுகளுக்கும் மேலாக கனவாக இருந்து வந்தது. இந்நிலையில், ஆயிரத்து 916 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் நிர்வாகம் சார்பிலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பாகவும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அத்திக்கடவு – அவினாசி திட்டம் மூலம், 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வறட்சி காலங்களில் குடிநீர் தேவை பூர்த்தியாவதுடன், 24 ஆயிரத்து 468 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதியும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 தலைமுறைகளின் கனவுத்திட்டம் நிறைவேறியதால், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

விளம்பரம்

இந்தத் திட்டத்தின்படி, ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 32 ஏரிகள், 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர் நிலைகளில் நீர் நிரப்பப்படும். இதற்காக பவானி, நல்லகவுண்டம்பாளையம் உள்ளிட்ட 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1998-ஆம் ஆண்டில் 134 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட இந்த திட்டம் தற்போது 1916 கோடி ரூபாயில் நிறைவடைந்தது.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 1972 ஆம் ஆண்டு கருணாநிதி செயல்படுத்திட முனைந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களை நேரில் சந்தித்து, திமுக ஆட்சியில் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

விளம்பரம்

இதையும் படிங்க: மக்களே உஷார்.. இன்று இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்.. வானிலை எச்சரிக்கை!

அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கான பணிகள் 2019 ஆண்டில் தொடங்கப்பட்டிருந்தாலும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், இதனை நிறைவேற்றிட உறுதிபூண்டு, ஆயிரத்து 916 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுப் பணிகள் விரைவு படுத்தப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *