தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி, விரைவில் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக செய்திகள் சுழன்றடித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். இம்மாதம் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்க கூடும் என்ற செய்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜகண்ணப்பனின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கான மாதம் தோறும் ரூ.1000 பெறும் திட்டத்திற்கான வங்கி அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கான வங்கி அட்டையினை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். அப்போது விழாவில் பேசிய அவர், ”சொல்லாத திட்டத்தை எல்லாம் கொண்டு வரும் நம் முதல்வர் கட்சி மாட்சரியங்கள் இன்றி அம்மா உணவகங்களுக்கும் நிதி ஒதுக்கி வருகிறார். கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள் என நமது முதல்வர் செயல்பட்டு வருகிறார். அந்த அடிப்படையில் மாணவர்களின் உயர் கல்விக்கான இந்த திட்டத்தை முதல்வர் துவக்கியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வகிக்கும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் திறன் வளர்ச்சி திட்டம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்த துறை நமது துணை முதல்வர்…” என்றவர் திடீர் என சுதாரித்து, ”சாரி அமைச்சர் உதயநிதி, வரும் 19ஆம் தேதிக்குப் பிறகுதான் துணை முதல்வர் எனக் கூற வேண்டும். அதற்கு முன் சொல்லக்கூடாது” என வடிவேலு பாணியில் கூற விழாவில் பங்கேற்ற திமுகவினர் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் துணை முதல்வர் பதவி குறித்து தேதியுடன் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88