ஆசிரியர்கள் கைது: `எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இதுதானா?' – சீமான் கண்டனம்

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 60 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றும் வகையிலும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை மற்றும் பதவி உயர்வை பாதிக்கும் வகையிலும், பள்ளிக் கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜேக்) சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின்

இன்று முதல் 31-ம் தேதி வரை சென்னை டி.பி.ஐ வளாகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆசிரியர்கள் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243-ஐ கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்ய வேண்டும், உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் தொடக்கக்கல்வி ஆசிரியர் பெருமக்களைக் கொடுங்குற்றவாளிகள் போல கைதுசெய்யும் தி.மு.க அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. தி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைத்தானே ஆசிரியர் பெருமக்கள் நிறைவேற்றக் கோருகிறார்கள்? ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் அதைக்கூட தி.மு.க அரசால் நிறைவேற்ற முடியாதா? உரிமை கேட்டு அமைதிவழியில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையாகும்.

சீமான்

அதைக்கூட அனுமதிக்க மறுப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? கருத்துரிமையைக் காலில் போட்டு மிதித்து, போராடும் ஆசிரியர்களை சமூக விரோதிபோலக் கைது செய்வதுதான் சமூகநீதி அரசா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? தி.மு.க அரசு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் பெருமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவித்து, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தரவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *