திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அன்பே என்ற ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலமாக பெண் தேடியிருக்கிறார். இதில், ஆன்லைன் வரன் மூலம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான சத்யா என்ற பெண் அவருக்கு அறிமுகமாகி உள்ளார்.
தொடர்ந்து இருவரும் பழகி வந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு வீட்டில் சொல்லாமல் திருமணம் செய்துள்ளனர். பின்னர் இளைஞரின் வீட்டில் உள்ளோர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது வீட்டில் வைத்து சத்யாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சத்யாவின் பெயரை ரேஷன் கார்டில் இணைக்க முயன்ற போது சத்யாவின் கணவராக மற்றொருவர் பெயர் பதிவாகி இருப்பது இளைஞருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக சத்யாவின் சொந்த ஊரில் விசாரித்து இருக்கிறார்
அதில், சத்யாவுக்கு ஏற்கனவே பல பேருடன் திருமணமாகி அவருக்கு குழந்தை இருக்கும் தகவல் தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். ஒவ்வொருவரையும் திருமணம் செய்து அவர்களுடன் சில நாட்கள் வாழ்ந்து விட்டு, வீட்டில் இருக்கும், நகை, பணத்துடன் ஓட்டம் பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் சத்யா.
இளைஞர் வீட்டிலும் திருடுவதற்கு சரியான நேரத்திற்காக சத்யா காத்திருந்த நிலையில், அதற்குள் அனைத்து விவரங்களையும் மகேஷ் தெரிந்து கொண்டார். இந்நிலையில் சத்யாவிடம் சாதுர்யமாக பேசி தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞர் காவல் நிலையத்தில் வைத்து அவர் மீது புகார் கொடுத்து இருக்கிறார்.
தன்னை சிக்க வைப்பதற்காக காவல் நிலையம் அழைத்து வந்திருப்பதை கடைசி நிமிடத்தில் கண்டுபிடித்த சத்யா அங்கிருந்து நைசாக நழுவி தப்பி சென்று விட்டார். மேலும் பல்வேறு இடங்களில் விசாரித்ததில் சத்யாவால் ஏராளமான ஆண்கள் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சத்யா மீது புகார் கொடுத்திருக்கும் தகவல் அறிந்த மேலும் நான்கு பேர், தங்களையும் சத்யா ஏமாற்றி விட்டதாக கூறி, தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சத்யா திருமணம் செய்து சுமார் 15 பேரையும், திருமணம் செய்யாமல் 50-க்கும் மேற்பட்டவர்களையும் ஏமாற்றி இருப்பதாக அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சத்யாவின் ஏமாற்று வேலையில் ஆடு மேய்ப்பவர், காவல் உதவி ஆய்வாளர், தொழில்அதிபர், சர்வேயர், அரசியல்வாதி என பலர் சிக்கி பணத்தை இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சத்யாவும், தமிழ்செல்வி என்ற பெண் புரோக்கரும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். திருமணத்திற்கு வரன் தேடும் ஆண்கள் குறித்த தகவல்களை புரோக்கர் தமிழ்ச்செல்வி சேகரித்து கொடுக்க, அவர்களை சரியாக ஏமாற்றி காரியத்தை முடித்து இருக்கிறார் சத்யா.
இதையும் படிங்க:
ஆம்ஸ்ட்ராங் படுகொலை : CBI விசாரணை தேவையில்லை – சீமான்
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார் தலைமறைவாக இருக்கும் சத்யா மற்றும் புரோக்கர் தமிழ்ச்செல்வியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
.