காங்கிரஸ் 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 44 இடங்களுடன் மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு மக்களவையில் ஆட்சியும் பா.ஜ.க வசம் சென்றது, எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையும் காலியானது. அதைத்தொடர்ந்து, 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 303 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையாகப் பெரிய வெற்றியைப்பெற, காங்கிரஸ் வெறும் 52 இடங்கள் பெற்று மீண்டும் படுதோல்வியடைந்தது. இதனால், 2019-லும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை காலியாகவே இருந்தது.
இவ்வாறாக, 2014 முதல் 2024 வரை பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருந்த 10 ஆண்டுகளிலும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை காலியாகவே இருந்தது. சொல்லப்போனால், மக்களவை அந்த 10 ஆண்டுகளும் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாமலே செயல்பட்டது. காரணம், மத்தியில் ஆட்சியைப் பிடிக்க எப்படி குறைந்தபட்சம் 272 இடங்கள் தேவையோ, அதேபோல அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாகச் செயல்பட குறைந்தபட்சம் 55 இடங்கள் தேவை. அதாவது, மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவிகித இடங்களை ஒரு கட்சி பெறவேண்டும்.