ஆதார் எண்களை மாற்றி அண்ணா பல்கலைகழகத்தில் `பேராசிரியர்கள்’ முறைகேடு – பின்னணி என்ன?!

அண்ணா பல்கலைகழகத்தின்கீழ் செயல்படும் 185 பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக தரச் சான்று வழங்கியதாகவும், முறைகேடான ஆவணங்களை சமர்பித்து 353 பேராசிரியர்கள் விதிகளை மீறி ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியராக பணி செய்து வந்ததையும் அம்பலப்படுத்தியிருக்கிறது அறப்போர் இயக்கம். முறைகெடு புகாரில் உண்மை இருப்பதாகவே `ரியாக்ட்’ செய்திருக்கிறார் அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் வேல்ராஜ்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தினர், “கடந்த 2023-24 கல்வியாண்டில் தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது அண்ணா பல்கலைக் கழகத்தின் CAI எனும் Affiliation பிரிவு. அதோடு 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக வேலை செய்வதும் அம்பலப்பட்டிருக்கிறது. இதை அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகரித்துதான் முறைகேட்டின் உச்சம். இதன்மூலம் 972 முழுநேர பேராசிரியர் இடங்கள் மோசடியாக நிரப்பியிருப்பதும் அம்பலமாகிறது. இதனால் 224 கல்லூரிகளில் பேராசிரியர் இல்லாமலயே இருப்பதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது.

எனவே அந்த 2023-24இல் குழுவை ஏற்படுத்தி ஆய்வை மேற்கொண்ட அப்போதைய CAI இயக்குநர் இளையபெருமாள், Inspection Committee உறுப்பினர்கள், 224 கல்லூரி நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்” என்றனர் அதிர்ச்சி கிளப்பும் விதமாக.

நிர்மல் குமார்

நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் நிர்மல்குமார், “மிகுந்த அதிர்ச்சியளிக்கக் கூடிய இந்த முறைகேடுகள் குறித்தெல்லாம் துறையின் அமைச்சர் பொன்முடிக்கும் துறை முக்கிய அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. தெரியவில்லை என அவர்கள் சொன்னால் எந்த லட்சணத்தில் துறையை கவனித்து வருகிறார்கள் என்றே கேட்க தோன்றுகிறது.

அதிலும் இத்தணை கல்லூரிகள் முறைகேட்டில் ஈடுபட்டபோதிலும் எப்படி தரச்சான்று வழங்கப்பட்டது? யாரெல்லாம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்? இதுவே ஸ்டாலின் குடும்பத்தினரும் அமைச்சர்கள் நடந்தும் கல்லூரிகளும் பள்ளிகளிலும் இப்படியான முறைகேடு இல்லாமல் உலகத் தரத்தில் இருக்கும்போது அவர்களின் ஆட்சிப் பொறுப்பில் இயங்கும் பல்கலைகழகங்கள் மட்டும் இந்த லட்சணத்தில் இயங்குகிறது. இந்த அரசின் நிர்வாக தோல்வி நாளுக்கு நாளுக்கு நிரூபணமாகிக் கொண்டே இருப்பதுதான் வேடிக்கை. அண்ணா பல்கலைகழகத்தின் வேந்தராக இருக்கும் ஆளுநர் இதில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். பல்லாயிரம் மாணவர்களின் வாழ்வில் விளையாடும் தி.மு.க அரசை கண்டிப்பதோடு உரிய விசாரணை நடத்தி குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார் கொதிப்புடன்.

பொன்முடி, ஆளுநர் ரவி

முறைகேடு சம்பவங்கள் குறித்து பேசிய அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் வேல்ராஜ், “இந்த புகார் வந்தவுடன் ஆதார் எண்கள் அடிப்படையில் பரிசோதனை செய்தோம். அப்போதுதான் ஆதார் எண்களை மாற்றி கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. சுமார் 189 பேர் இதில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனை விசாரிக்க குழு அமைத்துவிட்டோம், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என உறுதியளித்தார்.

இதனிடையே தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமன விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

“முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பட்டியல் வெளியிடப்படுமா? இந்த பேராசிரியர்களை பயன்படுத்தி மோசடி செய்த தனியார் கல்லூரிகள் எவை? இதில் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? அரசியல்வாதிகளுக்கு இதில் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்பதையெல்லாம் விசாரிக்கப்படுமா?” எனக் கேள்வி எழுப்புகிறார்கள் சமூக செயற்பாட்டாளர்களும் மாணவ அமைப்புகளும்.

தமிழ்நாடு அரசுதான் விளக்கம் சொல்ல வேண்டும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *