ஆம்ஸ்ட்ராங் படுகொலை:
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவரைக் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி ஒரு மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது. இந்த கொலை சம்பந்தமாக ஆற்காடு சுரேஷின் பொன்னை பாலு உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் மறைத்துவைத்திருந்த ஆயுதங்களை எடுத்துக் கொடுக்க செல்லும்போது தப்பிக்க முயற்சி செய்ததாகவும், காவலர்களைத் தாக்கியதாகவும் சொல்லி அவரை என்கவுன்ட்டர் செய்ததாக காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.
இந்த என்கவுன்ட்டரைத் தொடர்ந்து, இந்த கொலையில் தொடர்புடையதாக அஞ்சலை உட்பட மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களைத் தொடர்ந்து இந்த கொலைக் குற்றத்தில் தொடர்புடைய மேலும் சில ரெளடிகளை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஒருபுறம் என்கவுன்ட்டர், விசாரணை, கைது உள்ளிட்ட காவல்துறையின் நடவடிக்கைகள் தடதடக்கும் சமயத்தில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்குக் கொலை மிரட்டல் வந்திருப்பது பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது.
மிரட்டல் கடிதம்!
பெரம்பூரில் இருக்கும் வேணுகோபால சாமி தெருவில்தான் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதே தெருவில்தான் ஆம்ஸ்ட்ராங்கின் அலுவலகமும் இருக்கிறது. அந்த அலுவலக முகவரிக்குச் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் பெயரிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. இந்த கடிதத்தை ஆம்ஸ்ட்ராங்கின் உதவியாளர் செல்வம் என்பவர் பிரித்துப் படித்திருக்கிறார்.
அந்த கடிதத்தில், “ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கும் என்பது நண்பனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். இல்லையென்றால், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் மகளைக் கடத்தி கொலை செய்துவிடுவோம். அதோடு, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவோம்” என்று மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது.
காவல்துறையில் புகார்!
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட துயரத்திலிருந்து அவர்கள் யாருமே வெளிவரவில்லை. அந்த சமயத்தில் அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஆறுதல் தெரிவித்ததுடன் அந்த குடும்பத்துடன் துணை நிற்பதாகவும் ஆறுதல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மிரட்டல் கடிதம் தொடர்பாக, ஆம்ஸ்ட்ராங் உதவியாளர் செல்வம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை நடைபெறும் அதே செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக, கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சதீஷ் என்பவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், “இந்த கடிதத்தை நான் எழுதவில்லை. என் பெயரைப் பயன்படுத்தி வேறு யாரோ கடிதம் எழுதியிருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சதீஷின் அனைத்து விவரங்களையும் வாங்கிக்கொண்டு அவரை அனுப்பிவைத்திருக்கிறார்கள் போலீஸார். மேலும், ஆம்ஸ்ட்ராங் குடும்பம் வசிக்கும் அயனாவரம் குடியிருப்புக்குத் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
போலீஸ் மீது அச்சமில்லையா?
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் என்கவுன்ட்டரும் செய்யப்பட்டிருக்கிறார். வழக்கு விசாரணை இதுவரை விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில் எப்படி ஒரு மிரட்டல் கடிதம் வந்திருப்பது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். “செங்கல்பட்டைச் சேர்ந்த சதீஷ் என்பவர் முகவரியில் கடிதம் வந்திருந்தது. சம்பந்தப்பட்ட நபரை அழைத்து விசாரித்ததில் அவருக்கும் வந்திருந்த மிரட்டல் கடிதத்துக்கு எந்தத்தொடர்பும் கிடையாது. யாரோ ஒருவர் மொட்டை கடுதாசியை இன்னொருவர் பெயரில் எழுதி அனுப்பியிருக்கிறார்.
ஒருவேளை விசாரணையை மடைமாற்றக் கைதான நபர்களின் கூட்டாளிகள் அல்லது தேடப்படும் ரெளடிகள் யாரவது இந்த வேலையைப் பார்த்திருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணையை விரிவுபடுத்தியிருக்கிறோம். இந்த கடிதத்தை வைத்து காவல்துறை மீது பயம் போய்விட்டது என்று சொல்லிவிட முடியாது. குற்றவாளிகளை நெருங்குவதால் சம்பந்தப்பட்ட யாரோ ஒருவர் இப்படிச் செய்திருக்கலாம். விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த கடிதத்தை அனுப்பியவர்கள் கண்டிப்பாக விரைவிலேயே காவல்துறையினரிடம் சிக்குவார்கள்” என்றார்கள் சுருக்கமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88