பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் அருகே கடந்த 5-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடல் சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை ஆம்ஸ்டராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியிடம் படுகொலை குறித்த தகவல்களைக் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து, பேசிய அவர், “புத்தர் காட்டிய மனிதாபிமான வழியில் வாழ்ந்தவர் ஆம்ஸ்டராங். ஏழை எளியவர்களுக்கு பெரும் உறுதுணையாக இருந்து செயலாற்றியவர். ஆம்ஸ்டராங் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையடைந்தேன். பகலில், அதுவும் அவருடைய வீட்டருகிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. ஆம்ஸ்டராங் கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.