ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் 8 பேரை, செல்போன் சிக்னல் மூலம் 3 மணி நேரத்திற்குள் கைது செய்ததாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இது அரசியல் கொலை அல்ல என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். 10 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், 3 மணி நேரத்திற்குள் 8 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இது அரசியல் கொலை அல்ல என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.
ஆற்காடு சுரேஷ் கொலைக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். தேர்தலின்போது ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கி, மீண்டும் கடந்த மாதம் 13-ஆம் தேதி அவரிடம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் காவல் ஆணையர் கூறினார்.
இதையும் படிங்க:
அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழி.. ஓராண்டுக்குள் திட்டத்தை முடித்த ஆற்காடு பாலு.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பகீர் தகவல்கள்
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புளியந்தோப்பைச் சேர்ந்த கோகுல், விஜய், சிவசக்தி என்ற மூன்று பேரை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளனர்.
.