பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடுத்தடுத்து பல ரவுடிகளும், பல்வேறு கட்சியினரும் கைது செய்யப்பட்ட நிலையில், 2- நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்த அஸ்வதாமன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது தந்தையும், ரவுடியுமான நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 24-ஆவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள நாகேந்திரனை கைது செய்ததற்கான ஆணையை சிறை நிர்வாகத்திடம் சென்னை காவல்துறையினர் வழங்கினர்.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் காஷ்மீரில் பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வட இந்தியாவில் அவர் தலைமறைவாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில், மும்பை, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படையினர் தேடியும் அவர் சிக்கவில்லை. இந்த நிலையில், காஷ்மீரில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ஒருவரின் உறவினர் பாதுகாப்பில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனிப்படை காஷ்மீருக்கு விரைந்துள்ளது.
Also Read :
சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே எப்போது ரயில் சேவை தொடங்கப்படும்?
இது ஒருபுறமிருக்க, ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, தனது குழந்தையுடன் கலந்துகொண்டார். இதேபோல், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் தீனா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்தவர்களே அவரது கொலைக்கு உறுதுணையாக செயல்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். போராட்டத்தில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் உணர்ச்சி பொங்க பேசிய போது, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி கலங்கியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட ஆயிரத்து 500 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
.