தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை உதிர்த்து விடுவார். குறிப்பாக அ.தி.மு.க குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் அண்ணாமலை சில கருத்துகள் சொல்வார். பதிலுக்கு அவர்கள் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்வார்கள். இது தமிழக அரசியல் களத்தில் அனலை கிளப்பும்.
இந்த சூழலில்தான் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்துக்குச் சென்ற அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார், “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குள்ளாகி இருக்கிறது. குற்றம் நிகழ்ந்த பிறகுதான் அரசு நடவடிக்கை எடுக்கிறது. மாநகர ஆணையரை மாற்றுவது, புதிய ஆணையரை நியமிப்பது போன்ற நடவடிக்கைகள் தேவையற்றவை. குற்றம் நிகழ்ந்த பிறகு காவல் துறைக்கு அழுத்தம் கொடுப்பது குறுக்கு வழிகளை எடுக்கவே உதவும். என்கவுன்டர் இதற்கு தீர்வாகாது. என்கவுன்டரை ஆதரித்தால் மாநிலம் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிலைக்குச் சென்றுவிடும். அது கூடாது” என்றார்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “வெகுஜன மக்களை ஏமாற்றி, ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்து வந்தால், அவர்களுக்கு கட்சியிலே பொறுப்புகள் கொடுத்து, ஆதரித்து, தைரியம் கொடுப்பது… இதுதான் பா.ஜ.க-வின் சித்தாந்தமாகத் தமிழ்நாட்டில் உள்ளது. ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் முதல் அறிக்கை பதிந்த பிறகும், பாஜக விளையாட்டுத்துறையில் அவர்களை விளையாட்டாகச் சேர்த்து, வெகுஜன மக்களின் விரோதத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுடைய அதிகாரமும், ஏமாற்றுப் பணமும் எதுவரை பாய்ந்திருக்கிறது என்றால், மத்திய அமைச்சரை சந்திக்கிறார்கள்; பிரதமருடைய கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இது எல்லாம் எதைக் காட்டுகிறது என்றால், ஏழை எளிய மக்களிடம் கொள்ளையடியுங்கள், ஏமாற்றுங்கள் நாங்கள் உங்களை காப்பாற்றுகிறோம் என உறுதி அளிப்பதாக உள்ளது” என பேசினார்.
இதில் கடுப்பான அண்ணாமலை, “செல்வப் பெருந்தகை முன்பு ரெளடி பட்டியலிலிருந்தவர். ஆகவே, அவருக்கு தெரிந்திருக்கலாம். ஏனென்றால் நான் ரெளடி பட்டியலிலிருந்தவன் இல்லை. ஆகவே, செல்லப் பெருந்தகையிடம் சொல்லிவிட்டுத்தான் ரெளடிகள் கொலை செய்தனரா.. தமிழ்நாட்டில் உள்ள ரெளடிகளை எல்லாம் செல்வப்பெருந்தகை தான் கண்காணித்து வருகிறாரா.. ஒருவேளை செல்வப்பெருந்தகை தமிழ்நாட்டில் கூடுதல் டிஜிபி ஆக பொறுப்பேற்று உள்ளாரா.. என்று எனக்குத் தெரியவில்லை. செல்வபெருந்தகை சொல்வதைப் போன்ற ஆட்களுக்கு பா.ஜ.க-வில் இடமே இல்லை. எனவே எந்த விளக்கம் தேவை என்றாலும் அவரிடம் தான் கேட்கவேண்டும். ஏனெனில் அவர் ஒரு முன்னாள் ரெளடி என்ற வகையில் அவருக்கு தொடர்பு இருக்கிறதா? என்பதை காவல்துறையினர் தான் விசாரிக்க வேண்டும்” என்றார்.
இதற்கு செல்வப்பெருந்தகை, “அண்ணாமலை நான் ரெளடி பட்டியலிலிருந்தவன் என்பதை நிரூபிக்க வேண்டும். எந்தக் காவல்நிலையத்திலாவது எனது பெயர் ரெளடி பட்டியலிலிருந்ததா.. அல்லது இருக்கிறதா.. அப்படி இருந்தால் என்னை காவல்துறை விட்டுவிடுமா.. எனவே இது ஒரு அவதூறு. அண்ணாமலை இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், அவர் மீது என்னென்ன சட்டங்களின் படி வழக்குத் தொடர முடியுமோ அதை நான் தொடருவேன். முதல்வர் ஸ்டாலின் 32 பக்க உளவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் தெரியுமா? இந்த அறிக்கையில் உள்ள 261 குற்றவாளிகள் பா.ஜ.க-வில்தான் உள்ளனர்.
இவர்கள் அத்தனை பேர் மீதும் 1977 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவ்வளவு வழக்குகளைக் கொண்டவர்களுக்கு பா.ஜ.க-வில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொடுத்தவர் அண்ணாமலை. இவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரியா? இவர் கர்நாடகாவில் என்ன வேலை பார்த்திருப்பார்? கர்நாடகாவில் கல்புருக்கி, கவுரி லங்கேஷ் போன்ற எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில்தான் இவர் அதிகாரியாக இருந்துள்ளார். ஆகவே, அண்ணாமலை பற்றிய விவரங்களைக் கர்நாடக அரசிடம் இருந்து கேட்டுப் பெற இருக்கிறேன். அண்ணாமலை கர்நாடகாவில் என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் ஏன் திடீரென்று ராஜினாமா செய்தார்? அதைப் பற்றி ஆய்வு செய்யக் கோரிக்கை வைக்க இருக்கிறேன்.
20 ஆண்டுகள் முன்பாக ஆர்.எஸ்.எஸ் ஆட்களின் சிபாரிசு பேரில் என் மீது 4 வழக்குகளைப் போட்டார்கள். என் மீதான வழக்குகளை காவல்துறை சரியாக விசாரிக்காது எனவே சிபிசிஐடியை விசாரிக்கச் சொல்லுங்கள் என்று தைரியமாக முறையிட்டேன். என் வழக்குகாக வாதாடியவர் அன்றைக்கு வழக்கறிஞராக இருந்த சந்துரு. அதன் பின்னர் அவர் நீதிபதியாகிவிட்டார். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டு என் மீதான வழக்குகளை அழித்துவிடுமாறு கேட்டுக் கொண்டார். நான் ரத்து செய்யச் சொல்லவில்லை. மன்னிப்புக் கேட்கவில்லை. அரசே வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதுதான் என் பின்னணி. இவர்களைப் போல் மன்னிப்புக் கேட்ட பரம்பரையல்ல நாங்கள்” என்றார்.
பிறகு பேசிய அண்ணாமலை, “இந்தப் பிரச்னையை நான் ஆரம்பிக்கவில்லை. செல்வப்பெருந்தகை தான் இரண்டு நாட்கள் முன்னதாக பா.ஜ.க-வில் ரெளடிகள் சேர்க்கப்படுகிறார்கள் என்று சொல்லி முதலில் சர்ச்சையைத் தொடங்கிவைத்தார். எனவே அவரது கடந்த கால வரலாற்றைச் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு எழுந்தது. காங்கிரஸ் கட்சி என்பது 1885-ல் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. எங்கேயாவது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்த ஒருவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கிறாரா? என்று இந்தியா முழுவதும் தேடிப் பார்த்தால் யாருமே இருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்.
ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு அனைவருக்கும் தெரியும். அந்த வழக்கில் கைது செய்ய காவல்துறை போனபோது தப்பிக்க முயன்று செல்வப்பெருந்தகை காலை உடைத்துக் கொண்டது எல்லோருக்கும் தெரியும். இன்றைக்குப் பசுத் தோல் போர்த்திய புலியாக நான் காந்தி வழியில் வந்தேன் என்கிறார். அவர் மீது வழக்குப் போட்டது ஜெயலலிதாதான். ஆனால், இந்த வழக்குக்கு ஆர்.எஸ்.எஸ் காரணம் என்று அவர் சொல்கிறார். இவர் மீது சிபிஐ வழக்கு உள்ளது. பண மோசடி வழக்கு உள்ளது. அவர் மீது 304 வழக்கு உள்ளது. இவர் சொல்கிறார் பா.ஜ.க-வில் ரெளடிகள் சேர்கிறார்கள் என்று. ஆகவே, அவர் யார் என்பதை நாங்கள் சொல்கிறோம். அவர் என்னை நீதிமன்றத்திற்கு அழைக்கிறார். நானும் அவரை அழைக்கிறேன். அவர் லண்டனில் முதலீடு செய்துள்ள பணத்தைப் பற்றிப் பேசுவோம். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் கடைநிலை ஊழியராக இருந்த செல்வப்பெருந்தகை லண்டனில் என்ன வாங்கி வைத்துள்ளார்? அவரது மனைவி பெயரில் என்ன சொத்துகள் உள்ளன.. ஆடிட்டர் ஏன் கொலை செய்யப்பட்டார்.. அந்த வழக்கில் கைமாறிய பணம் எவ்வளவு?” என்றார்.
இதற்கிடையில் திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில், “ஆருத்ரா மோசடி வழக்கிற்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் பா.ஜ.கவிற்கும் உள்ள தொடர்பு குறித்து கேட்டால் அதற்கு பதிலளிக்க முடியாமல் தனிமனித தாக்குதலை நடத்துகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பற்றி குறைகூறும் அண்ணாமலை இந்திய குற்றவியல் சட்டத்தில் உள்ள மிக மோசமான பிரிவுகளான IPC 506 (கிரிமினல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள்), IPC பிரிவு-153A/1 (வீட்டை அழிக்கும் நோக்கத்துடன் தீவைத்தல், வெடிபொருள் பயன்படுத்துதல், சதி செய்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள், IPCபிரிவு-153B/ 2 (இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இனம், மொழி, பிறந்த இடம், வசிப்பிடம் மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல்), IPC பிரிவு-500 (அவதூறுக்கான தண்டனை தொடர்பான குற்றச்சாட்டுகள்), IPC பிரிவு-503/1 (குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள்)
IPC பிரிவு-504/1 (அமைதியைக் குலைக்கும் வகையில் வன்முறையை தூண்டும் நோக்கத்துடன் பேசுதல், செயல்படுதல், வேண்டுமென்றே அவமதிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள்), IPC பிரிவு-427 (ஐம்பது ரூபாய் அல்லது அதற்கு மேல் இழப்பு அல்லது சேதம் விளைவித்தல், தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள்), IPC பிரிவு-499 (அவதூறு செய்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள்), IPC பிரிவு-188 (பொது ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்ப்படியாமை தொடர்பான குற்றச்சாட்டுகள்) என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு, நீதி தேவன் மயக்கத்தால் விடுவிக்கப்பட்ட இந்தியாவின் ‘Exemplary Rowdy Sheeter’ “அமித் ஷா” உள்துறை அமைச்சராக உள்ளது குறித்து வாய்திறப்பாரா?. பாட்டி வடை சுட்ட கதை சொல்லாமல் ஆருத்ராவிற்கும் பா.ஜ.க மற்றும் அமர்பிராத் ரெட்டி, R.K. சுரேஷ் மற்றும் ரெளடி ஆற்காடு சுரேஷ்’கும் உள்ள தொடர்பு குறித்து பதில் சொல்லுங்க சார். சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கு காந்திய வழியில் செல்பவர்கள் கிரிமினல்களாகத் தான் தெரிவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “செல்வப்பெருந்தகை லண்டனில் சொத்து வைத்திருக்கிறார் என அண்ணாமலை கூறுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சிதானே நடந்தது. ஏன் அப்போதெல்லாம் பெருந்தகை மீது பா.ஜ.க நடவடிக்கை எடுக்கவில்லை. பா.ஜ.க-வில் ரெளடிகள் இருக்கிறார்கள், தொடர்ந்து இணைகிறார்கள் என்றுதான் அண்ணாமலை தெரிவித்தார். மயிலாடுதுறை சத்யாவுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்த சர்ச்சையில் பா.ஜ.க பிரமுகர் அலெக்சிஸ் சுதாகர் சிக்கியிருக்கிறார். பாம் சரவணன் மனைவி மகாலட்சுமி அக்கட்சியின் சிந்தனையாளர் பிரிவில் இருக்கிறார். இவ்வளவு ஏன் கோவை பா.ஜ.க-வில் இருக்கும் ஒரு நபர் தான் போலீஸ் அதிகாரி என சொல்லி கடையில் பணம் பறித்திருக்கிறார். இதையடுத்து அவரை போலீஸார் கைதும் செய்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் பிற கட்சிகளில் நடந்ததாக தெரியவில்லை. செல்வப்பெருந்தகை மீது வழக்குகள் இருப்பதாக அண்ணாமலை சொல்கிறார். பிறகு ஏன் ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். ஏனெனில் ஆம்ஸ்ட்ராங் மீதும் இதேபோன்ற வழக்குகள் இருந்து முடித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று நீதி கேட்கிறார். அப்போது பெருந்தகைக்கு சுண்ணாம்பு, ஆம்ஸ்ட்ராங்குக்கு வெண்ணையா.. சமீபத்தில் பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா 232 ரெளடிகள் பாஜகவில் இருப்பதாக சொல்கிறார். தங்க கடத்தல் விவகாரத்தில் பிரீத்திவி என்பவர் சிக்கியிருக்கிறார். இதுகுறித்தெல்லாம் அண்ணாமலை ஏன் பேசவில்லை. ஆகவே அண்ணாமலை லாஜிக்குடன் பேச வேண்டும். அபத்தமான அரசியலை அண்ணாமலை செய்து வருகிறார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88