`இங்கு சாராய, கஞ்சா ஆட்சிதான் நடக்கிறது!’ – தமாக பொதுக்கூட்டத்தில் கொதித்த எதிர்க்கட்சித் தலைவர்கள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம், தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய ஜி.கே.வாசன், “சட்டமன்ற தேர்தலுக்கு வலு சேர்க்கும் மேடையாக இந்த மேடை உள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம் மட்டுமல்ல, அவசரம் என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். காமராஜர் ஆட்சியில் கல்வி, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கியது. ஆனால், இன்று விவசாயிகள் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விவசாயிகள் மருத்துவமனையில் இருக்கும் கோமா நோயாளிகளை போல் அவதிப்படுகிறார்கள். கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காத அரசாக கர்நாடக காங்கிரஸ் அரசு உள்ளது.

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் அரசு உள்ளது. அதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும், தி.மு.க அரசும் தட்டி கேட்பது இல்லை. அரசியல் சாசனத்தினை முன்வைத்து அரசியல் செய்வதாக தம்மட்டம் அடிக்கும் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் அரசியலமைப்பு சட்டத்தின் படி உருவாக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை மதிக்காதது ஏன்?. கர்நாடக அரசு காவிரி பிரச்னையை தண்ணீர் பிரச்னையாக பார்க்காமல் விவசாயிகளின் உயிர் பிரச்னையாக பார்க்க வேண்டும். கர்நாடகவில் தேர்தல் நேரத்தில் அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என தி.மு.க தலைவர்கள் துடித்துப் போனார்கள்.

ஜி.கே.வாசன்

ஆனால், இன்று தமிழக அரசு விவசாயிகள் தண்ணீரின்றி கஷ்டப்படுவது குறித்து கவலைப்படுவதில்லை. விவசாயிகளுக்கு தண்ணீர் பெற்று தராமல் தி.மு.க அரசு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறார்கள். கர்நாடகாவிடம் தி.மு.க கூட்டணி அரசு மண்டியிட்டு உள்ளது. இனி, எந்தக்காலத்திலும் தி.மு.க-வை விவசாயிகள் மன்னிக்க தயாராக இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தான் தமிழகம் முன்னேறி கொண்டு இருக்கிறது. தி.மு.க-வே நீங்கள் ஆண்டது போதாதா…உங்கள் ஆட்சியில் மக்கள் மாண்டது போதாதா என்பது குறித்து நாங்கள் கேட்க விரும்புகிறோம். தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என்றார்.

அடுத்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், “காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்த தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் சூழல் மோசமாகி உள்ளது. பணத்திற்காக மக்கள் வாக்களிக்கும் நிலையை இன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தி விட்டார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் வாக்குக்குப் பணம் கொடுத்து, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். காமராஜர் வாழ்ந்த இந்த பூமியில் நல்ல ஆட்சியை, ஊழலற்ற, மது விலக்கு உள்ள ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பது தான் நம் எண்ணமாக உள்ளது. வேலைவாய்ப்பின்மையால் போதைக்கு அடிமையாகி இன்று இளைஞர்கள் கூலி படையாகி மாறி உள்ளனர். காமராஜர் அனைத்து ஊர்களிலும் அரசு பள்ளிகளை கொண்டு வந்தார். மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார். அந்த கல்வி தான் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக வளர காரணம். தமிழ்நாட்டில் விவசாயம் பெருகவும் 8 அணைகளை காமராஜர் கட்டினார். பெல் உள்ளிட்ட தொழிற்சாலைகளை உருவாக்கியவர் காமராஜர். ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை தந்தவர் காமராஜர். காமராஜரை போன்று மோடி இந்தியாவில் நல்லாட்சியை தந்து கொண்டிருக்கிறார்

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

நாம் அவர் கரத்தை வலுப்படுத்தி 2026 – ல் நாம் ஆட்சி அமைக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் கல்வியை பணமாக்கி கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். டி.என்.பி.எஸ்-க்கு கூட தலைவரை நியமிக்க முடியாத ஆட்சியாக தி.மு.க ஆட்சி உள்ளது. தி.மு.க அரசு சாதிவாரி கணெக்கெடுபை எடுக்க மறுக்கிறார்கள். தி.மு.க விளம்பரத்தை மட்டும் நம்பி ஊழலை தவிர வேறு எதையும் செய்யவில்லை. தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் எதையும் செய்யவில்லை. காமராஜர் ஆட்சி காலம் பொற்காலம் திராவிட மாடல் ஆட்சி இருண்ட காலம் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். வரும் 2026 – ல் நாம் ஒற்றுமையாக இருந்து தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

அதனைத்தொடர்ந்து பேசிய, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாடு வளர்ச்சி அடைய அடித்தளமிட்டவர் காமராஜர் தான். கடந்த 1971 – ல் மதுவிலக்கை நீக்கியவர் கலைஞர். அவர் மூன்று தலைமுறைகளை வீணடித்து விட்டார். ராஜாஜி கொண்டு வந்த குல கல்வி திட்டத்தை ஒழித்து மூடிய பள்ளிக்கூடங்களை திறந்தவர் காமராஜர். 13 நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றினார். அவருக்கு பின்னால் ஆட்சிக்கு வந்தவர்கள் ஒரு நீர்பாசன திட்டத்தை கூட நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரியை இன்று கொள்ளையடித்து விட்டார்கள். அதை நாம் காப்பாற்ற வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் இடையே தடுப்பணை கேட்டோம். ஆனால், தமிழ்நாடு அரசு 20 மணல் குவாரிகளை தான் தந்துள்ளார்கள். விக்கிரவாண்டி இடைதேர்தலில் வாக்கிற்காக பணத்தையும், பொருளையும் கொடுத்தார்கள். ஆடு, மாடுகளை போல் மனிதர்களை பட்டியில் அடைத்து வைத்தார்கள்.

அன்புமணி ராமதாஸ்

கல்வி, சமூக நீதி, நீர் மேலாண்மை உள்ளிட்டவற்றுக்கும், தி.மு.க அரசுக்கும் சம்மந்தமே கிடையாது. இலவச கல்வி கொடுப்பது தான் அரசின் கடமை. இன்று மூன்றில் இரண்டு தனியார் பள்ளிகள் தான் உள்ளது. இது அரசின் தோல்வி. கல்வி குறித்து பேசாமல் சட்டமன்றத்தில் டாஸ்மாக் குறித்து பேசுகிறார்கள். 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ளார்கள். அவர்கள் படித்தவர்களா, பண்புள்ளவர்களா, மக்களுக்காக பேசுவார்களா?. காமராஜர் ஆட்சியை கொண்டு வருவது எங்களால் தான் முடியும். தமிழ்நாட்டில் சாராய ஆட்சி, கஞ்சா ஆட்சி தான் நடக்கிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *