நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் இன்று காலை வல்லபாய் சாலை பகுதியில் வாக்கிங் சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக, மதுரை தல்லாகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், தனது கட்சி நிர்வாகியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தமிழ்நாடா, உத்தரப்பிரதேசமா என கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். ஈவிரக்கமற்ற இக்கொடுஞ்செயலை நிகழ்த்திட்டவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் தம்பியின் குடும்பத்தாரை எவ்வாறு ஆற்றுப்படுத்துவதென்று தெரியாது கலங்கி நிற்கிறேன். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது, மனது கனக்கிறது.