க்ரிஷி விக்யான் கேந்திரா (kvk) என்பது இந்தியாவில் உள்ள வேளாண் அறிவியல் மையமாகும். இந்த மையங்கள் அந்தந்த மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவை. மேலும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான இணைப்பாக, வேளாண் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துகின்றன. இந்த கேவிகே (வேளாண் அறிவியல் மையங்கள்)-க்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அதாவது, இந்தியாவில் இயங்குகிற க்ரிஷி விக்யான் கேந்திராவின் பட்டியலை மாநில வாரியாக வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் எங்கெல்லாம் க்ரிஷி விக்யான் கேந்திரா அமைக்கும் திட்டம் இருக்கிறது? கேவிகே கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறதா? அதன் செயல்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இணை அமைச்சர் பகிரத் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில்,
க்ரிஷி விக்யான் கேந்திரா மையங்களானது அதன் பயன்பாடு, திறன் மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் செயல் விளக்கத்தின் அவசியத்தைக் கொண்டுள்ளன. விவசாயிகளின் வயல்களில் மேம்படுத்தப்பட்ட வேளாண் தொழில்நுட்பங்கள், அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான விவசாயிகளின் திறன் மேம்பாடு, விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் நல்ல தரமான விதைகள், நடவு பொருள்கள் மற்றும் பிற தொழில்நுட்ப உள்ளீடுகளை உற்பத்தி செய்தல் போன்றவற்றை கொண்டுள்ளது. விவசாயிகளிடையே நவீன விவசாய தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதற்காக, கிருஷி விக்யான் கேந்திரா மையங்கள் மூலம் ஏராளமான விரிவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
(ஆ) தேசிய வேளாண்மை ஆணையமானது (1976) அதன் “ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கம்” பற்றிய ஒரு அறிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கே.வி.கே. மையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் புதியதாக KVK மையங்களை திறப்பது பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை மற்றும் வழிகாட்டுதல்களின்படி ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.
விவசாயிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நாடு முழுவதும் உள்ள வேளாண் அறிவியல் மையங்களின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும் அரசு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டில் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அரசாங்கமானது ரூ.7730.76 லட்சத்தை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்தது.
உள்கட்டமைப்பு என்பது நிர்வாகக் கட்டிடம், உழவர் விடுதி, பணியாளர் குடியிருப்பு, செயல் விளக்கப் பிரிவு, பண்ணை மேம்பாட்டுப் பணிகள் போன்றவை ஆகும். வேளாண் அறிவியல் மையங்களின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.
வேளாண் அறிவியல் மையங்களின் செயல்திறன் மற்றும் செயல்பாடுகள் அரசாங்கத்தால் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த மையங்களின் மூன்றாம் தரப்பு மதிப்பீட்டை, குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசாங்கம் நடத்திவருகிறது. கடைசியாக இதுபோன்ற மதிப்பீடு 2020-ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள ‘இந்தியன் சொசைட்டி ஆஃப் அக்ரி பிசினஸ் ப்ரொபஷனல்ஸ்’ மூலம் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் முக்கிய கண்டுபிடிப்புகளாக பரப்பளவு அதிகரிப்பு, பயிற்சியில் பெண்களின் விகிதம் அதிகரிப்பு, விதை உற்பத்தி மற்றும் நடவுப் பொருட்களின் அதிகரிப்பு ஆகியவை அடங்கும்.
நாடு முழுவதும் மொத்தம் 731 வேளாண் அறிவியல் மையங்கள்(கேவிகே) செயல்படுகின்றன.
மாநிலம்/யூனியன் பிரதேசம் வாரியாக
வேளாண் அறிவியல் மையங்களின் எண்ணிக்கை:
1.அந்தமான் நிக்கோபார் தீவுகள்- 3
2.ஆந்திரப் பிரதேசம் – 24
3.அருணாச்சல பிரதேசம் – 17
4.அசாம் – 26
5.பீகார் – 44
6. சத்தீஸ்கர் – 28
7.டெல்லி – 1
8.கோவா – 2
9.குஜராத் – 30
10.ஹரியானா – 18
11.ஹிமாச்சல பிரதேசம் – 13
12.ஜம்மு காஷ்மீர் – 20
13.ஜார்கண்ட் – 24
14.கர்நாடகா – 33
15.கேரளா – 14
16.லடாக் – 4
17.லட்சத்தீவு – 1
18.மத்திய பிரதேசம் – 54
19.மகாராஷ்டிரா – 50
20.மணிப்பூர் – 9
21.மேகாலயா – 7
22.மிசோரம் – 8
23.நாகாலாந்து – 11
24.ஒடிசா – 33
25.புதுச்சேரி – 3
26.பஞ்சாப் – 22
27.ராஜஸ்தான் – 47
28.சிக்கிம் – 4
29.தமிழ்நாடு – 32
30.தெலுங்கானா – 16
31.திரிபுரா – 8
32.உத்தரகாண்ட் – 13
33.உத்தரப்பிரதேசம் – 89
34.மேற்கு வங்காளம் – 23
மொத்தம் – 731
என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இணை அமைச்சர் பகிரத் சவுத்ரி தெரிவித்தார்.