`இந்தியா கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும்?' – Exit Polls-க்குப் பின் ராகுல் காந்தி கூறிய பதில் என்ன?

இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையோடு முடிவடைந்தது. கடந்த இரண்டு மாதங்களாக 7 கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலின் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படியிருக்க, வாக்குப்பதிவுக்கு பிந்தைய ஊடகங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியானது.

மோடி, ராகுல்

இதில், பெரும்பாலான ஊடகங்கள் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் கூட்டணியாக 350-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்றும் தெரிவித்திருக்கின்றன. அதேபோல், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கிட்டத்தட்ட 150 இடங்கள் பெறும் என்றும், எந்த கூட்டணியிலும் சேராத மற்ற கட்சிகள் கிட்டத்தட்ட 40 இடங்கள் பெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலில், காங்கிரஸ் டெல்லியிலுள்ள தனது கட்சித் தலைமையகத்தில் இன்று முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடத்தியது. இதில், தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், நேற்று வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் மோடியின் கற்பனை கருத்துக்கணிப்பு முடிவுகள் என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, “இது மோடி மீடியாவின் கருத்துக்கணிப்பு முடிவுகள். மோடியின் கற்பனைக் கருத்துக்கணிப்பு” என்று பதிலளித்த ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும் என்ற கேள்விக்கு, “சித்து மூஸ் வாலாவின் 295 பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என சூசமாகப் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *