மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த சம்பவம் குறித்து பாஜக பிரமுகரும், நடிகையுமான நமீதா வீடியோ வெளியிட்டு எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக மதுரையிலுள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்கள் நமீதாவும் அவரின் கணவரும். அப்போது பேசிய நமீதாவின் கணவர் வீரேந்திர சௌத்ரி, “நாங்கள் மீனாட்சியம்மன் கோயிலுக்கு இஸ்கான் நிர்வாகிகளுடன் சென்ற போது அங்கிருந்த கோயில் அலுவலர்கள் எங்களை தடுத்து நிறுத்தி இந்துவா? முஸ்லிமா? என கேள்வி கேட்டார்கள்.
நீங்கள் முஸ்லிம் என தகவல் கிடைத்துள்ளது, அதனால் இந்து என்பதற்கான சான்று காண்பிக்க வேண்டும் என்றனர். அப்போது ஆதார் அட்டையை காட்டியபோது அதில் மத அடையாளம் இல்லை எனக் கூறி கோயில் அதிகாரிகள் அவமரியாதையாக பேசினர்.
நீண்ட நேரம் எங்களை அங்கே காத்திருக்க வைத்து, நாங்கள் இந்துதான் என பலமுறை கூறியும் அவர்கள் கேட்க மறுத்தனர். தமிழகத்திலுள்ள கோயிலில் இதுபோன்று மதத்திற்கான சான்று கேட்டது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் வரக்கூடிய மீனாட்சியம்மன் கோயிலில் இது போன்று அலுவலர்கள் நடந்து கொண்டது தமிழகத்தின் பெயரை கெடுத்துவிடும்.
நாங்கள் இந்து என பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் நம்பாமல் குங்குமத்தை கொடுத்து நெற்றியில் வைக்கச் சொன்னார்கள். அதைச் செய்த பின்புதான் உள்ளே அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்ய சென்றோம்.
இந்தியா முழுவதிலும் பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளோம். இந்துவாக இருந்து எங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணருடைய பெயர் வைத்துள்ளோம். இந்த நிலையில் இதுபோன்று நடந்தது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உரிய விளக்கத்தை அளித்தம் கூட கோயில் அதிகாரிகள் அவமரியாதையாக நடந்து கொண்டனர். இதனை அரசியலாக்க விரும்பவில்லை” என்றார்.
நமீதா பேசும்போது, “நான் இதற்கு முன் ஐந்து முறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்திருக்கிறேன். ஆன்மீக பயணத்தின்போது எந்த தொந்தரவுவும் அளிக்க கூடாது என்பதற்காக யாரிடமும் சொல்லாமல் செல்வேன், அதேபோன்றுதான் சென்றேன்.
மீனாட்சியம்மன் கோயிலில் காக்க வைத்து பின்னர் என்னிடம் முஸ்லிமா, இந்துவா என கேட்டனர், என் கணவர் பேசிய பின்னர்தான் அனுமதித்தனர். காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி, அவர்கள்தான் தரிசனம் செய்ய வைத்தார்கள், பாதுகாப்பாக திரும்பினோம், இது தொடர்பாக புகார் அளிக்க போவதில்லை , இதுபோன்று மீண்டும் நடக்க கூடாது, அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள். கோயிலுக்கு வருபவர்களை கண்ணியத்துடன் வரவேற்க வேண்டும், நல்ல கலாசாரத்தில் உள்ளோம், தகுதியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” என்றார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயில் நிர்வாகம் இதுகுறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்காத நிலையில், கோயில் ஊழியர்களோ, ‘கோயில் வழிப்பாட்டில் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதால் சந்தேகமான நபர்களிடம் இதுபோன்று விசாரிப்பது வழக்கமானதுதான், வேறொன்றும் இல்லை’ என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88