பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 293 இடங்களைக் கைப்பற்றி மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. என்.டி.ஏ கூட்டணியில், பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்து 240 இடங்களை வென்ற போதிலும், கடந்த முறை என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெறாத தெலுங்கு தேசம் கட்சி இந்த முறை கூட்டணியில் இணைந்து 16 இடங்களிலும், அதேபோல் கடந்த முறை கூட்டணியில் அங்கம் வகித்து பின்னர் வெளியேறி மீண்டும் கூட்டணியில் இணைந்த ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும் வென்று என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.
இதனாலேயே, என்.டி.ஏ அரசின் அமைச்சரவையில் முக்கிய துறைகள் சந்திரபாபு நாயுடு கட்சிக்கும், நிதிஷ் குமார் கட்சிக்கும் ஒதுக்கப்படும் அல்லது அவர்கள் கேட்டுப் பெறுவார்கள் என்று பேச்சுகள் அடிபடுகின்றன. இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் வெற்றிபெற்ற அனைத்து எம்.பி-க்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளும் கூட்டம் டெல்லியில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மோடியை என்.டி.ஏ கூட்டணியின் தலைவராக முன்மொழிந்து பேசிய சந்திரபாபு நாயுடு, “தேர்தல் பிரசாரத்தின் போது 3 மாதங்கள் இரவு பகலாக மோடி ஓய்வெடுக்கவேயில்லை. ஆந்திராவில் 3 பொதுக்கூட்டங்கள் மற்றும் ஒரு மாபெரும் பேரணியை நடத்தினார். இது ஆந்திராவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மோடிக்கு கூர்மையான தொலைநோக்குப் பார்வை இருக்கிறது. தனது கொள்கைகள் அனைத்தையும் உண்மையான மனப்பான்மையுடன் செயல்படுத்துகிறார். மோடி தலைமையிலான என்.டி.ஏ அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கிறது.
இன்று இந்தியாவுக்கு சரியான தலைவர் இருக்கிறாரென்றால் அது மோடி தான். இது இந்தியாவுக்கு கிடைத்த நல்வாய்ப்பு. இதைத் தவறவிட்டால், பின்னர் எப்போதும் நாம் இழக்க நேரிடும்” என்று கூறினார்.
அவரைத்தொடர்ந்து, பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், “நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்திருப்பது மிகவும் நல்ல விஷயம். இனி பீகாரில் நிலுவையிலுள்ள அனைத்துப் பணிகளும் செய்து முடிக்கப்படும். நாங்கள் அனைவரும் உங்களுடன் (பிரதமர் மோடி) இணைந்து செயல்படுவோம். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறீர்கள். ஆனால் அதை இன்றே செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன்.
இருப்பினும், நீங்கள் எப்போது பதவியேற்றாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். எதிர்க்கட்சிகள் (இந்தியா கூட்டணி) நாட்டுக்கும் மாநிலங்களுக்கும் எதுவும் செய்யவில்லை. அடுத்த முறை நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எதிர்க்கட்சிகள் இந்த முறை பெற்ற இடங்களில் கூட வெற்றிபெறாது என்று நான் உணர்கிறேன்” என்றார்.