அ.தி.மு.க-வும் – பா.ஜ.க-வும் தங்களது கோட்டை என்று கூறிக்கொண்டிருக்கும் கொங்கு மண்டலத்தின் தலைநகரமான கோவை மாவட்டத்தில், தி.மு.க முப்பெரும் விழாவை நடத்தியுள்ளது. தேர்தல் வெற்றிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல், முதலமைச்சருக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா ஆகியவற்றை ஒன்றாக நடத்தி தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் 40 எம்.பி-க்களையும் ஒரே மேடையில் ஏற்றி வெற்றி முழக்கமிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வினர் வழக்கத்தை விட அதிகமாக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான் வெற்றி விழாவுக்கும் கோவையை டிக் அடித்துள்ளனர்.
இந்த விழாவுக்காக முதலில் செட்டிப்பாளையம் எல் அண்ட் டி சாலையில் உள்ள இடத்தைத்தான் தேர்வு செய்தனர். அங்குதான் தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் – காங்கிரஸ் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அதே இடத்தில் வெற்றி விழாவை நடத்தி 40 எம்.பி.க்-களை மேடையில் ஏற்றுவதுதான் திட்டம். ஆனால் மழை எச்சரிக்கை காரணமாக, விழாவை கொடிசியா மைதானத்தில் நடத்தியுள்ளனர்.
சிறிய இடம் என்பதால் அங்கு 30,000 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. தொகுதிக்கு 3,000 பேர் என்ற அடிப்படையில் மக்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் முத்துசாமி முன் நின்று செய்தார். அமைச்சர் எ.வ.வேலு விழாவை தொகுத்து வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர். மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள், எம்.பி-க்கள் இருந்தனர். திருப்பூர் எம்.பி சுப்பராயன் மாலை 3:30 மணியளவில் முதல் ஆளாக மேடையேறினார். அடுத்தடுத்து மற்ற எம்.பி-க்கள் வந்தனர். தயாநிதி மாறன் கடைசியாக வந்தார். அப்போது மேடையில் இருக்கைகள் இல்லை.
உடனடியாக பூச்சிமுருகன் இருக்கை கொண்டுவரச் சொல்லி தயாநிதி மாறனை அமரவைத்தார். துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மேடை ஏறியவுடன் மேடையில் இருந்த அனைவருக்கும் மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தார். அப்போது பொருளாளர் டி.ஆர்.பாலு – கனிமொழி இடையே வணக்கம் `மிஸ்’ ஆனது.
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல கூட்டணியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூரும் ஆப்சென்ட் ஆனார். சபரீசன் மற்றும் அமைச்சர்கள், சென்னை மேயர் உள்ளிட்டோர் கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7 மணியளவில் மேடையேறினார். எம்.பி-க்கள், கட்சி சீனியர்களுக்கு உதயநிதி கையால் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் பரிசு வாங்கும்போது, கூட்டம் ஆர்ப்பரித்தது.
மேடைக்கு எதிரே தலைவர்களுக்கு மின் விளக்குகளால் ஆன கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. 6 உருவங்களில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் உருவங்கள் தெளிவாகத் தெரிந்தன. ஸ்டாலின் – உதயநிதி கட்அவுட்களுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த கட்அவுட் யாருடைய உருவம் எனத் தெரியவில்லை. இது குறித்து உதயநிதி, அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர், அது யார் என்று பேசி சிரித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசிக்கொண்டிருக்கும்போது முதலமைச்சர் ஸ்டாலின் மேடை ஏறினார். இதனால் செல்வப்பெருந்தகை சிறிது நேரம் இடைவெளி விட்டுப் பேசினார். மாலை 5:15 மணியளவில் மேடை ஏற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 7:40 மணியளவில்தான் வந்தார். திராவிடர் கழகம் தலைவர் வீரமணி, தி.மு.க தலைவருக்கான இலக்கணம் குறித்து கருணாநிதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்த விஷயத்தைப் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது ஸ்டாலினிடம் செல்வப்பெருந்தகை பேசிக்கொண்டிருந்தார். உடனே டி.ஆர்.பாலு, ஸ்டாலினை அழைத்து இதை கவனியுங்கள் என்று கூறினார். ஸ்டாலின் மேடையேறிய சில நிமிடங்களில் காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் கிளம்பிவிட்டார்.
மேடையில் பேசிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர் ஸ்டாலினின் ஆளுமை, கூட்டணிக் கட்சிகளை அரவணைப்புடன் ஒருங்கிணைத்து வழிநடத்தியது குறித்து அதிகம் பாராட்டினார்கள். முக்கியமாக சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆகியோர் கோவை தொகுதியில் தி.மு.க நேரடியாக இறங்கி ரிஸ்க் எடுத்து, கடந்தமுறை தி.மு.க தமிழ்நாட்டிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை சி.பி.எம்-க்கு வழங்கியதை குறிப்பிட்டு சிலாகித்தனர்.
ஸ்டாலினும் ‘இது கொள்கையால் உருவான கூட்டணி’ என்றதுடன், சட்டமன்றத் தேர்தலில் ‘உங்கள் கையில் இருக்கும் தொகுதிகளையும் கைப்பற்றுவோம்’ என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விட்டுள்ளார். `இதே கூட்டணியுடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தையும் கைப்பற்றி ஆட்சியமைப்போம்’ என்பதை முப்பெரும் விழா மூலம் அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb