திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான சௌந்தரபாண்டியனை, அவரின் தொகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு அழைக்காமல் அமைச்சர் கே.என்.நேரு `புறக்கணிப்பு’ செய்த விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது. இதுகுறித்த அமைச்சர் கே.என்.நேருவின் ஃபேஸ்புக் பதிவின் கீழ், “லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் இயற்கை எய்திவிட்டதால், லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது’ என்று சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் கமெண்ட் போட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
லால்குடி சட்டமன்ற உறுப்பினரான சௌந்தரபாண்டியன், நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கே.என்.நேருவின் ஆதரவாளரான இவருக்கு ஆரம்பத்தில் சீட் பெற்றுக் கொடுத்தது கே.என்.நேருதான். இந்நிலையில், சில வருடங்களாக சௌந்தரபாண்டியனை அவர் ஓரங்கட்டுவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான், அமைச்சர் கே.என்.நேருவின் ‘அழையா’ விவகாரம் பூதாகரமாகியிருக்கிறது.
‘என்ன நடந்தது?’ என்று லால்குடி தி.மு.க-வினர் சிலரிடம் விசாரித்தோம்.
“கே.என்.நேருவின் தீவிர விசுவாசி சௌந்தரபாண்டியன். அதனால்தான், அவருக்கு கே.என்.நேரு சீட் பெற்றுக் கொடுத்தார். ஆனால், சௌந்தரபாண்டியன் தன்னிச்சையாக செயல்படுவதாக நினைத்த கே.என்.நேரு கடந்த சில வருடங்களாக அவரிடம் பாராமுகமாக நடந்துகொள்கிறார் என்கிறார்கள். அதேபோல், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மாவட்டத்தில் நடக்கும் எந்த அரசு விழாவிலும் சௌந்தரபாண்டியன் கலந்துகொள்வதில்லை. காரணம், அதிகாரிகள் யாரும் அவருக்கு அழைப்பு விடுப்பதில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால், ‘உங்களை அழைக்க வேண்டாம் என்பது மேலிட உத்தரவு’ என்று பதில் சொல்லி வந்தார்கள். இதனால், சொல்லவும் முடியாமல் மெல்லமும் முடியாமல் சௌந்தரபாண்டியன் அல்லாடி வந்தார்.
இந்நிலையில்தான், நேற்று லால்குடியில் புதிதாக கட்டப்படும் தாலுக்கா அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் அமைச்சர் நேருவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அந்த பதிவில் தான், சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், ‘லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் இயற்கை எய்திவிட்டதால், லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது’ என்று கமெண்ட் போட்டுள்ளார்.
அதாவது, அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான, அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரான தன்னை அழைக்காமல் இப்படி ஓரங்கட்டுகிறார்கள் என்ற கோபத்தில் அப்படி கமெண்ட் போட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த விவகாரம்தான், தற்போது பரபரப்பாகியிருக்கிறது. அமைச்சர் கே.என்.நேருவுக்கும், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனுக்கும் இடையில் நீறுபூத்த நெருப்பாக புகைந்து வந்த பிரச்னை, இந்த கமெண்ட் மூலம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இந்த விசயம் பரபரப்பானதை தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேருவின் அந்த அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தான் போட்ட கமெண்டை சௌந்தரபாண்டியன் டெலிட் செய்ததாகச் சொல்லப்படுகிறது. கட்சி தலைமை கண்டிக்காதவரையில், இந்த அமைச்சர் – சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரது மோதல் போக்கு இன்னும் பெரிதாகவே செய்யும்” என்றார்கள்