கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 55 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 100-க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை உயருமோ என்ற அச்சம் அனைவரின் மத்தியிலும் நீடிக்கிறது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி த.வெ.க தலைவர் விஜய் வரை அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் உயிரிழந்தோரின் கிராமத்துக்கு நேரில் சென்று அஞ்சலி, ஆறுதல் தெரிவித்துவருகின்றனர். ஒட்டு மொத்த தமிழ்நாடு மக்களும் தமிழக அரசையும் காவல்துறையையும் கேள்விகளால் துளைத்தெடுத்துவருகின்றனர்.
தமிழக முதல்வரும் வழக்கம்போல அதிகாரிகளை டிரான்ஸ்பர், சஸ்பெண்ட் செய்தல், விசாரணை ஆணையம் அமைத்தல், வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றல், லட்சங்களில் நிவாரணம் அறிவித்தல் என பழைய ஃபார்முலாவை பின்பற்றியே விஷயத்தை ஆறப்போடும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். உண்மையில் அரசாங்கம் எங்கு சறுக்கியது?
கள்ளச்சாராயம் அதிகமாக புழக்கத்தில் இருப்பதும் அதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது வட மாவட்டங்களில்தான். இதே கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் போல கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர். அப்போதும் தனிப்படை அமைக்கப்பட்டு கள்ளச்சாராய விற்பனையில் சம்மந்தப்பட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த குற்றங்களைத் தடுக்கத் தவறிய செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-க்கள் முதல் தொடக்கநிலை காவலர்கள் வரை தற்காலிகமாக சஸ்பெண்ட்டும் டிரான்ஸ்பரும் செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 1600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து சாராயங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு லட்சக்கணக்கில் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “இது போன்ற ஓர் சம்பவம் இனி எப்போதும் நடக்காது; இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்!” என்று உறுதியாக அறிவித்தார். ஆனால், இந்த சம்பவம் நடந்த ஓராண்டு கடந்திருக்கும் நிலையில் தற்போது அதேபோன்று… அதைவிட மிகப்பெரிய உயிரிழப்பு சம்பவம் கள்ளச்சாராயத்தால் நடந்திருக்கிறது. ஒருமுறை நடந்தால் தவறு… பலமுறை தொடர்ந்தால் அதற்கு பெயர் அரசின் நிர்வாகத்தோல்வி தானே!
கடந்த சம்பவத்தைப் போலவே, தற்போதும் தமிழ்நாடு அரசு அதேபோல குற்றவாளிகளை கைது செய்திருக்கிறது. இந்த குற்றத்தை தடுக்கத்தவறிய கள்ளக்குறிச்சி எஸ்.பி. சமய்சிங் மீனா முதல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி,கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ் வரைக்கும் 10 காவல்துறை அதிகாரிகளை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. அதுமட்டுமல்லாமல், சம்பவத்தின் தொடக்கத்தில், “உயிரிழந்தவர்களுக்கு வெவ்வேறு உடல்நல பாதிப்பு இருந்தது. அதனால் தான் அவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்” என்று பொய்யான தகவல் தெரிவித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கள்ளச்சாராய விவகாரம் வெடிப்பதும், அதுதொடர்பாக காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்படுவதும் முதல்முறையோ இரண்டாம் முறையோ அல்ல! பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நீடிக்கும் சாராய சாம்ராஜ்யம். கள்ளச்சாராய வியாபாரிகளிடமும், அவர்களுக்கு பக்க பலமாக இருந்துவரும் அரசியல் பிரமுகர்களிடமும் வெளிப்படையான கூட்டு வைத்துக்கொண்டே காவல்துறை எதையுமே கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள் அப்பகுதி மக்கள். குறிப்பாக, கள்ளச்சாராயத்தால் தற்போது தங்கள் கிராமத்தின் பெரும்பாலான ஆண்களை பலியாக்கி, ஊரே சுடுகாடாகிப் போயிருக்கும் கருணாபுரத்தின் பாதிக்கப்பட்ட மக்கள், “போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்னாடியே கள்ளச்சாராயம் விக்கிறாங்க… லஞ்சத்தை வாங்கிகிட்டு போலீஸ்காரங்க எந்த நடவடிக்கையும் எடுக்காம வேடிக்கை பாத்துட்டு இருக்காங்க… போலீஸ்காரங்களோட அலட்சியம்தான் கருணாபுரம் ஊரையே நாசமாக்கிடுச்சு!” என கண்ணீர்தோயந்த ஆத்திரத்துடன் கதறும் காணொளிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகின்றன.
கள்ளத்தனமாக இந்த சாராய ஊறல்கள் எல்லாம் காய்ச்சப்படுவது கிழக்குத் தொடர்ச்சி மலையான கள்வராயன் மலையில்தான்! கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதியான இந்த கல்வராயன் மலையில்தான் பல தசாப்தங்களாக சட்டவிரோத கள்ளச்சாராயங்கள் காய்ச்சப்படுகிறது. அப்படி காய்ச்சப்படும் சாராயங்கள் லாரி டியூப்கள், வாகனங்கள் மூலம் கிராமப் பகுதிகளுக்கு கொண்டுவரப்படுகின்றன. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகிலுள்ள கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுவருகிறது. அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், திம்மாபுரம், கல்லாநத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை, கருமந்துறை ஆகிய பகுதிகளிலிருந்து, கோட்டப்பட்டி, ஏ.கே.தண்டா, சிட்லிங், நரிப்பள்ளி உள்ளிட்ட மலைகிராமங்களிலும், தமிழ்நாடு-பாண்டிச்சேரி எல்லைப் பகுதியான திருக்கனூர், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, சோம்பட்டு உள்ளிட்ட இடங்களிலும்தான் சர்வசாதாரணமாக கள்ளச்சாராய புழக்கம் இருந்துவருகிறது. கடந்த 2024 மார்ச் மாதத்தில்கூட, கல்வராயன் மலைப்பகுதியில் 4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. கள்ளச்சாராயம் மட்டுமல்லாமல் போலி மதுபான ஆலைகள் இயங்கியதும் இந்த மலைப்பகுதிகளில்தான்.
இந்த இடங்களிளெல்லாம் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது என்பது காவல்துறையினருக்கு மிக நன்றாகவே தெரியும். கண்துடைப்பாக ஒருசில கைதுகள், கைப்பற்றல்கள் நடக்குமே தவிர உருப்படியான நடவடிக்கை இத்தனை ஆண்டுகளில் எடுக்கப்படவேயில்லை. சட்டவிரோதமாக, உயிரைக்கொல்லும் இந்த தரமற்ற கள்ளச்சாராய விற்பனை குறித்து பலமுறை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் கள்ளச்சாராய கும்பலோடு காவல்துறையினர் கூட்டு வைத்திருக்கிறார்கள் என்பதுதானே நிதர்சனம் என குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்து தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட காவல்துறை தற்போது அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்திவருகிறது. கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மீது ஏற்கெனவே கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதுதான் வேடிக்கை. இந்த கைது நடவடிக்கைகளை முன்பே செய்திருந்தால் இந்த நிலைக்குச் சென்றிருக்குமா? இப்போது கண்களில் விளக்கெண்னையை ஊற்றிக்கொண்டு கள்ளச்சாராய வியாபாரிகளை விரட்டி விரட்டி கைதுசெய்யும் காவல்துறை, கண்முன்பாக குற்றம்நடக்கும்போது என்ன செய்துகொண்டிருந்தது? பிரச்னை பெரிதாகும்போது நடவடிக்கை எடுப்பதும், அதன்பிறகு வழக்கம்போல கண்டுகொள்ளாமல் குற்றத்துக்கு துணைபோவதையும் எந்த விதத்தில் எடுத்துக்கொள்வது? என சீறுகிறார்கள் பொதுமக்கள்!
அதேபோல ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராயம் தொடர்பாக குற்றச்சம்பவங்கள், உயிரிழப்புகள் நடக்கும்போது முதல் ஆளாக அரசாங்க அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? என கேள்வி கேட்கிறார்கள் எதிர்கட்சியினர். மேலும், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துவருகின்றனர். இந்த இவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு ஒருபுறமென்றால் ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதிக்கமும் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் எதிர்கட்சி தலைவர்கள். குறிப்பாக, கடந்த ஆண்டு மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக குண்டாஸ் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட ராஜா என்பவர் தி.மு.க செஞ்சி மஸ்தானுடன் தொடர்புடையவர். அவருடைய மனைவி திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு தி.மு.க கவுன்சிலர். இதேபோல, கடந்த ஆண்டு புதுச்சேரியில் கைதுசெய்யப்பட்ட ஏழுமலை என்பவரும் தட்டாஞ்சாவடி பகுதி தி.மு.க கிளைச் செயலாளர். தற்போது கள்ளக்குறிச்சி தொடர்பாக கைதுசெய்யப்பட்டவரும் தி.மு.க-வுக்கு நெருக்கமானவர் என அறியப்படுகிறார். ஆளுங்கட்சியான தி.மு.க மட்டுமல்லாமல் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கான கட்சி செல்வாக்கை வைத்து இதுபோன்ற குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் எந்த பெரிய அசாம்பாவிதங்கள் நடந்தாலும் அப்போதெல்லாம் அரசாங்கம் கையிலெடுக்கும் ஓர் ஆயுதம்தான் ஆணையம். இதுவரை பல நூறுக்கணக்கான ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பல ஆணையங்கள் ஆய்வு நடத்தி அறிக்கையையும் அரசிடம் சமர்ப்பித்திருக்கின்றன. அதனால் ஒரு பயனாவதும் கிடைத்திருக்கிறதா என்றால் முதலமைச்சர் டோனில் `எந்தப் பயனும் இல்லை!’ என்றுதான் சொல்லவேண்டும். அனைத்து ஆணையங்களும் கிணற்றில் போட்ட கல்லாகத்தான் இருக்கின்றன. அப்படி மற்றுமொரு கல்லத்தைன் இந்த கள்ளச்சாராய விவகாரத்திலும் போட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.
குறிப்பாக, தமிழ்நாட்டில் இதுபோன்ற கள்ளச்சாராய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, 2 மாதங்களுக்குள் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகள் அத்தனை தனிப்படைகள், சிபிசிஐடி விசாரணைகள், கைதுகள், அதிகாரிகள் இடமாற்றம், புதிய அதிகாரிகள் நியமனம் என இத்தனை நடவடிக்கை எடுத்தும் நடக்காத மாற்றமா இந்த ஒற்றை ஆணையம் அமைப்பதில் தீர்ந்துவிடப்போகிறது? உண்மையில் காவல்துறையினரும் உளவுத்துறையினரும் நேர்மையாக, தீவிரமாக தங்கள் கடமைகளை மேற்கொண்டாலே கள்ளச்சாராய பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
சட்டவிரோதமாக சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ரு வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையையும் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சாதாரணமாக விபத்து நடந்தால் தான் அரசு நிவாரணம் அளிக்கும். அப்படிபார்த்தாலும் பட்டாசு ஆலை தீ விபத்தில் இறப்பவர்களுக்கு வெறும் 3 லட்சம் மட்டுமே நிவாரணம் வழங்கும் தமிழ்நாடு அரசு, வயிற்றுப் பிழைப்புகாக உயிரைப் பணயம் வைத்து வேலைசெய்து எதிர்பாராத விபத்தில் உயிரிழப்போருக்கும் சொற்ப தொகையையும், சட்டவிரோதமாக உடலுக்குத் தீங்கு என்று தெரிந்தும்கூட கள்ளத்தனமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு கோடிக்கணக்கில் நிவாரணம் அறிவிப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி கேட்கின்றனர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
கடந்த ஆண்டும் இதேபோன்ற கள்ளச்சாராய மரணத்திலும்கூட இதேபோன்று ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியது தமிழ்நாடு அரசு. இது அரசே தன் தவறை ஒப்புக்கொள்கிறதா? தவற்றை ஊக்குவிக்கிறதா? என்ற கேள்வியை அரசியல்வாதிகளும் எழுப்புகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அரசின் பக்கம் திரும்பாமல் இருக்க, அரசு போடும் திட்டம் தான் இந்த அதிக நிவாரணம் என்கிற வாதமும் வைக்கப்படுகிறது!
மேலும், இந்த கள்ளச்சாராய விவகாரத்தை அடுத்து தற்போது பூரண மதுவிலக்கை படிப்படியாக் அறிவிக்கவேண்டும் என தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதற்கொண்டு கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால், பூரண மதுவிலக்கு என்ற கோரிக்கை வலுப்பெறும்போதெல்லாம், ஆளும் ஆட்சியாளர்கள் சொல்லிவைத்தார்போல,`மதுவிலக்கை அமல்படுத்தினால் பிறகு கள்ளச்சாராய கலாச்சாரம் தலைதூக்கும், அதனால் ஏராளமான உயிரிழப்புகள் நடக்கும்’ என அக்கரையாக பதில்கூறி தப்பித்துக்கொள்வதுண்டு. அவர்களின் காரணத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே இந்த சம்பவங்களை எடுத்துக்கொண்டு பேசுகிறார்கள் ஆளும்வர்க்கத்தினர்.
கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு, “உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல. மெத்தனால் கலந்த விஷச்சாராயம்” என தெரிவித்தார். இப்போதும் அதே மெத்தனால் அதிகம் கலந்த கள்ளச்சாராயத்தால்தான் 55 பேர் தற்போதுவரை உயிரிழந்திருக்கின்றனர். காட்டுக்குள் மறைமுகமாக நடக்கும் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது சிரமம் என்றாலும்கூட, அதற்காக நகரங்களிலிருந்து கொண்டுவரப்படும் இந்த மெத்தனால் விநியோகத்தைக்கூடவா இன்னும் அரசால் கண்டுபிடித்து தடுக்க முடியவில்லை? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இந்த நிலையில், விஷ சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனைக்குச் செல்லாததே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் என்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதேபோல, சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்ய, சபாநாயகர் அப்பாவு தொடங்கி அமைச்சர்கள் வரை, இந்த பிரச்னையை இரும்புக்கரம் கொண்டு முதலமைச்சர் அடக்குவார் என்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலினோ, “இந்த பிரச்னையைக் கண்டு ஓடி ஒளிபவன் நான் அல்ல; பொறுப்போடு பதில் அளிப்பவன். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொறுப்பாக பதில் அளித்திருக்கிறேன்!” என வசனம் பேசுகிறார்.
கடைசிவரை காரணமும் விளக்கமும் அளித்து, அந்த நிமிட சமாளிப்பு ஆக்ஷன் மட்டுமே முதலமைச்சரும் அரசு அதிகாரிகளும் எடுக்கிறார்களே தவிர நிரந்தர தீர்வை நோக்கி நகரவில்லை. குற்றமும் பிழையும் நடந்தபிறகு காரணமும் நடவடிக்கையும் எடுப்பதைவிட, அவை நடக்காமல் தடுப்பதே நல்லாட்சிக்கு சான்று!
நல்ல மனிதனுக்கு ஒரு சொல்! நல்ல ஆட்சிக்கு ஒரு சம்பவம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88