கொதிப்பு மேலிட, “என்ன சார். இது சட்டப்படி தவறு என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படியிருக்கும்போது, இதுதான் அவர் மீது எடுக்கப்படும் கடும் நடவடிக்கையா?” என்று நாம் கேட்டதற்கு,
“அவர்தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே… மேற்கொண்டு எதுவாக இருந்தாலும் எங்கள் அலுவலகத்தில் ஏ.ஓ. இருப்பார் அவரிடம் கேளுங்கள்” என்று சொல்லி முடித்துக் கொண்டார். சாதாராண மனிதர் யாராவது இதுபோன்ற குற்றங்களை இழைத்தால், உடனே பாய்ந்து, குதறி எடுக்கும் அரசுத் துறைகள், இர்ஃபான் விஷயத்தில் `மன்னிப்புக் கடிதம்’ என்று சொல்லி, விவகாரத்தை திசைத் திருப்பிக்கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து, மருத்துவ செயற்பாட்டாளரும் மகப்பேறு மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத்திடம் பேசியபோது, “பெண் சிசுக்கொலைகளைத் தடுப்பதற்காகவே இந்தியாவில், `பாலின தேர்வைத் தடை செய்தல்’ சட்டம் கொண்டுவரப்பட்டது. ஸ்கேன் சென்டரில் இருப்பவரோ, மருத்துவரோ, வேறு யாருமோ குழந்தையின் பாலினத்தை வெளியில் சொன்னால், 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மருத்துவராக இருக்கும்பட்சத்தில், அவருடைய மருத்துவ பதிவும் ரத்து செய்யப்படும்.