இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களின் உதவித்தொகையை உயர்த்தி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் தின உதவித்தொகையை 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். அப்போது, பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் தின உதவித் தொகையை 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக வழங்க உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நெடுங்காலமாக மீட்க முடியாமல் உள்ள 127 படகுகளில், விசைப்படகுகளுக்கான நிவாரணத் தொகையை 5 லட்சம் ரூபாயிலிருந்து 6 லட்சம் ரூபாயாகவும், நாட்டுப்படகுகளுக்கு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அவர் அறிவுறுத்தினார்.
பாம்பன் தூக்குப்பாலம் அருகே தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயார்செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்கவும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்திக்கச் செய்யவும், மத்திய வெளியுறவு அமைச்சரை நாடாளுமன்ற உறுப்பினர் குழு விரைவில் சந்தித்து வலியுறுத்தச் செய்யவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
.