மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களில் ஆங்காங்கே பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. மும்பை அருகே இரு மைனர் சிறுமிகள் பள்ளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ரத்னகிரியில் பயிற்சி செவிலியர் ஆட்டோவில் சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மும்பை அருகே பத்லாப்பூர் பள்ளியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதிகள் ரேவதி, பிரித்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு இவற்றை விசாரித்து வருகிறது. இதன்மீதான விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “‘பொதுமக்கள் மனதில் ஆணாதிக்கம், ஆண் பேரினவாதம் மேலோங்கி இருக்கிறது.
வீடு, பள்ளியில் ஆண் – பெண் சமத்துவம் பற்றி கற்றுக்கொடுக்கவில்லையெனில், எத்தனை கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும், நிர்பயா சட்டங்கள் இருந்தாலும் எதுவும் உதவப்போவதில்லை. இதுவரை உதவியிருக்கிறதா? எதிர்காலத்தில் உதவுமா என்றும் யாருக்கும் தெரியாது. இளம் வயதில் மனநிலை மாறாத பட்சத்தில் பாலியல் குற்றங்களைத் தடுக்க சட்டம் உதவாது. சிறுமிகள்மீதான பாலியல் புகாரில் காவல்துறையின் விசாரணையில் சில முரண்பாடான உண்மைகள் இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு வரச்சொன்னது, ஆண் மருத்துவர்களை கொண்டு சோதனை செய்தது போன்றவை போக்சோ சட்ட விதிகளுக்கு எதிராக இருக்கிறது” என்று குறிப்பிட்டனர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் பிரேந்திரா, மூன்று போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் நீதிபதி வாக்குமூலம் வாங்கி இருக்கிறார். ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து சிறப்பு விசாரணைக்குழுவின் விசாரணை அறிக்கை உடனே கிடைக்க ஏற்பாடு செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.