உத்தவ் தாக்கரே கார்மீது தேங்காய், மாட்டு சாணத்தை வீசிய ராஜ் தாக்கரே கட்சியினர்- மும்பையில் பரபரப்பு! | Raj Thackeray party members threw coconuts and cow dung on Uddhav Thackeray’s vehicle in Mumbai.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பையையொட்டி இருக்கும் தானேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, தனது காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் தானேயில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தபோது ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவைச் சேர்ந்த தொண்டர்கள் உத்தவ் தாக்கரே கார்மீது தேங்காய் மற்றும் மாட்டுச்சாணத்தை வீசித் தாக்கிவிட்டு, சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் அதிகம் பரவி இருக்கிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து 20 பேரை கைது செய்துள்ளனர்.

உத்தவ் கார் மீது தாக்குதல்உத்தவ் கார் மீது தாக்குதல்

உத்தவ் கார் மீது தாக்குதல்

இது குறித்து தானே சிவசேனா (உத்தவ்) மாவட்ட தலைவர் ஆனந்த் துபே கூறுகையில், “‘ராஜ் தாக்கரேயை கூலிப்படையின் தலைவர் என்று ஏன் கூறுகின்றனர் என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளோம். இசட் பிரிவு பாதுகாப்பு இருக்கும் பால் தாக்கரே மகனுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களுக்கு இந்த அரசு எப்படி பாதுகாப்பு கொடுக்கும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. எனவே துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்” என்றார். உத்தவ் தாக்கரே தானேயில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து பேசுகையில், “அனைத்து முக்கிய தொழில் திட்டங்களையும் அண்டை மாநிலத்திற்கு கொடுத்துவிட்டு இப்போது ஓட்டுகளை விலைக்கு வாங்க பெண்களுக்கு 1,500 ரூபாய் கொடுக்கின்றனர். எனது வாகனத்தின்மீது தாக்குதல் நடத்தப்படுவதால், நான் பயப்படமாட்டேன்” என்றார்.

உத்தவ் தாக்கரேஉத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

முன்னதாக ராஜ் தாக்கரே மத்திய மகாராஷ்டிராவின் பீட் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவரது வாகனத்தின்மீது பாக்கு கொட்டைகளை உத்தவ் தாக்கரே கட்சியினர் வீசினர். அதற்கு பழிவாங்கும் விதமாக இப்போது உத்தவ் தாக்கரே மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். ராஜ் தாக்கரேயும் உத்தவ் தாக்கரேயும் சித்தப்பா – பெரியப்பா மகன்கள் ஆவர். ராஜ் தாக்கரே வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முயன்றார். ஆனால் பா.ஜ.க கைவிரித்துவிட்டதால், 250 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட ராஜ் தாக்கரே முடிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *